எலக்ட்ரீஷியன் கொலை: மேலும் 2 பேர் சிக்கினர்
ஏற்காடு, அக். 5ஏற்காடு, கீரைக்காடு புத்துார், மோட்டுக்காட்டை சேர்ந்தவர் சிவக்குமார், 36. எலக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி மாராயி, ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். மாராயிக்கும், மருதயங்காட்டை சேர்ந்த சந்தோஷ், 24, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதை, சிவக்குமார் கண்டித்துள்ளார். இதனால் மாராயி, சந்தோஷ் சேர்ந்து, சிவக்குமாரை கொல்ல திட்டமிட்டனர். அதன்படி கடந்த செப்., 28ல், சிவக்குமாரை, வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழிமறித்து, சந்தோஷ், அவரது நண்பர்களான, கீரைக்காடு புத்துார் அண்ணாமலை, 24, வாழவந்தி தினேஷ், 19, ஆகியோர், இரும்பு ராடால் அடித்து கொலை செய்தனர். ஏற்காடு போலீசார், மாராயி, சந்தோஷ், அண்ணாமலையை கைது செய்து, தினேைஷ தேடி வந்தனர். அவரது மொபைல் போன் சிக்னல், கள்ளக்குறிச்சியில் காட்டியது. இதனால் நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில், சிவக்குமாரை கொல்ல பயன்படுத்திய இரும்பு ராடை கொடுத்தது, வலசையூரை சேர்ந்த சக்திவேல், 19, என தெரிந்தது. தொடர்ந்து நேற்று காலை, வலசையூர், மன்னார்பாளையம் பிரிவில் இருந்த சக்திவேலையும், போலீசார் கைது செய்தனர்.