ஐசியுவில் உள்ளது சுகாதாரத்துறை முன்னாள் எம்.எல்.ஏ., கிண்டல்
ஆத்துார், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., 71வது பிறந்த நாளையொட்டி, சேலம் புறநகர் மாவட்ட மருத்துவ அணி சார்பில், ஆத்துார் நகராட்சி அண்ணா கலையரங்கில் மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார்.அதில் இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலர், முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் பேசியதாவது: சுகாதாரத்துறையில் அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் தான் ஓடுகிறார். அத்துறை துாங்கிக்கொண்டிருக்கிறது. தி.மு.க.,வினர் பாட்டியை படுக்க வைத்து, முகாம் என, 'போஸ்' கொடுத்துவிட்டு செல்வர். இ.பி.எஸ்., முதல்வராக இருந்தபோது, சுகாதாரத்துறை முதலிடத்தில் இருந்தது. திண்டுக்கல்லில் இரு கைகள் இழந்தவர், இ.பி.எஸ்.,க்கு மனு அளித்தார். அப்போது அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர், இறந்தவருடைய இரு கைகளை பொருத்தி, பின் அரசு வேலையை, இ.பி.எஸ்., வழங்கினார். உடல் உறுப்பு மாற்று சிகிச்சையில், அ.தி.மு.க., ஆட்சியின்போது, தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இந்த விருதை, 5 ஆண்டுகள் தொடர்ந்து பெற்றது. தி.மு.க., ஆட்சியில் தமிழகம் பூஜ்யத்தில் உள்ளதால் சுகாதாரத்துறை, 'ஐசியு'வில் தான் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து நடந்த முகாமில் ஏராளமானோர், பல்வேறு பரிசோதனைகளை செய்து கொண்டனர். இதில், எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, மாவட்ட மருத்துவர் அணி செயலர் ராம்பிரசாத், நகர செயலர் மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதம்பி, மாநில நிர்வாகிகள் காளிமுத்து, வரதராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.