| ADDED : ஆக 22, 2024 03:50 AM
சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, தனியார் பள்ளி ஆசிரியையிடம், 12.25 லட்சம் ரூபாய் மோசடி செய்த, சென்னையை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், அம்மாபேட்டை பிரதான சாலையை சேர்ந்த சந்திரபால் மனைவி சவுதாமணி, 43. எம்.எட்., முடித்த இவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர் நேற்று முன்தினம், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:என்னிடம், சென்னையை சேர்ந்த அருண்குமார், அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறினார். அத்துடன் என் கணவருக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டார். இதை நம்பி, 2021 முதல், பல்வேறு தவணைகளாக, நேரடியாகவும் ஆன்லைன் மூலமும், 12.25 லட்சம் ரூபாய் கொடுத்தேன். ஆனால் அருண்குமார் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படி கேட்டபோது மறுத்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார். இதையடுத்து அம்மாபேட்டை போலீசார், அருண்குமார் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.