| ADDED : மே 06, 2024 01:59 AM
பனமரத்துப்பட்டி: ''அரசு பஸ்சை பழுதுபார்த்தால் அரசை நடத்துகிற கட்சிக்கு பணம் வராது. புதிதாக பஸ் வாங்கினால் பணம் வரும்,'' என, பா.ஜ., மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் குற்றம்சாட்டினார்.சேலம் மாவட்டம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள, பா.ஜ.,வின் லோக்சபா தொகுதி அலுவலகம் முன் நேற்று, நீர் - மோர் பந்தலை திறந்து வைத்து, அக்கட்சி மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:திருநெல்வேலியின், காங்., கட்சி மாவட்ட தலைவர், பலமுறை போலீசாரிடம் முறையிட்டுள்ளார். போலீசார் சரியாக விசாரிக்காமல் பாதுகாப்பும் வழங்கவில்லை. அதேபோல் தமிழகம் முழுவதும் ஆள் கடத்தல், கொலை, கும்பலாக சேர்ந்து அதிகாரத்தை பயன்படுத்தி பணம் பறித்தல் அதிகமாகி வருகின்றன.போதை பொருட்களை தடுக்க, போலீசுக்கு கட்டளையிட முதல்வருக்கு அச்சம். ஏனெனில் கட்சி நிர்வாகிகள், 50 சதவீதம் பேர் உள்ளே போய் விடுவார்கள் என்ற காரணம்தான். யாராக இருந்தாலும் கைது செய்யலாம் என அறிவிக்க வேண்டும்.போதை பொருள் இல்லாத தமிழகம் என்ற நிலையை உருவாக்கும் முயற்சியை, ஜூனில் பள்ளி, கல்லுாரி திறக்கும் முன், முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.அரசு பஸ்சை பழுதுபார்த்தால் அரசை நடத்துகிற கட்சிக்கு பணம் வராது. புதிதாக பஸ் வாங்கினால் பணம் வரும். 1,000 பஸ் வாங்கினால் பெரிய அளவில் ஆட்சி நடத்துகிற போக்குவரத்து துறைக்கு பணம் கிடைக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.சேலம் கிழக்கு மாவட்ட பொதுச்செயலர் ராஜேந்திரன், மாவட்ட தலைவர் சண்முகநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சின்னுராஜ், வீரபாண்டி தொகுதி பொறுப்பாளர் வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.