| ADDED : மே 29, 2024 07:54 AM
சேலம் : கட்டாய கல்வி சட்டத்தில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மையற்ற அனைத்து தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது 1ம் வகுப்பு என, தொடக்க நிலை வகுப்புகளில், 25 சதவீதம், அரசு ஒதுக்கீடாக மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதற்கு மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்துகிறது. தனியார் பள்ளிகளில் கட்டணமின்றி சேர்க்கப்படுவதால் இத்திட்டத்தில் குழந்தைகளை சேர்க்க, பெற்றோர் இடையே போட்டி அதிகரித்து வருகிறது.சேலம் மாவட்டத்தில், 329 பள்ளிகளில், 4,173 இடங்கள், அரசு ஒதுக்கீடாக சேர்க்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டதில், 14,758 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று மாணவர் சேர்க்கை அந்தந்த பள்ளிகளில் நடந்தது. ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இடங்களை விட, கூடுதல் விண்ணப்பங்கள் பெற்ற பள்ளிகளில் விண்ணப்பித்திருந்த பெற்றோர் முன்னிலையில் குலுக்கல் முறையில் மாணவர் சேர் க்கை நடந்தது. ஒதுக்கீடு இடங்களை விட, குறைவாக விண்ணப்பித்திருந்த பள்ளிகளில், தகுதியான அனைவருக்கும் சீட் வழங்கப்பட்டது. மாணவர் சேர்க்கையை, பள்ளிக்கு ஒரு அரசு தலைமை ஆசிரியர் வீதம் நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டார்.