சேலம் மாவட்டம் முழுதும் இடி, மின்னலுடன் கனமழை
சேலம், சேலத்தில் ஒரு மாதத்துக்கு மேலாக வெயில் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த, 4 முதல், 'அக்னி நட்சத்திரம்' எனும் கத்திரி வெயில் தொடங்கியது. இந்நிலையில் சேலம் மாநகரில் நேற்று மாலை, 6:45 முதல் இரவு, 8:00 மணி வரை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பாய்ந்தோடியது.புது பஸ் ஸ்டாண்டில் மழைநீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியதால் பயணியர் அவதிப்பட்டனர். அதேநேரம் கத்திரி வெயில் தாகம் தணிந்து, பூமி குளிர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.வயலில் தேங்கிய நீர்அதேபோல் மல்லுார், பனமரத்துப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மாலை, 6:30 மணிக்கு கன மழை பெய்தது. தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது. வறண்டு கிடந்த வயல்களில் மழைநீர் தேங்கியது. இரவு, 8:45 மணிக்கு மழை சற்று குறைய, 9:15 மணிக்கு மின் வினியோகம் தொடங்கியது. தாரமங்கலத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் கன மழை பெய்தது.150 ஆண்டு மரம்ஆத்துார் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், மாலை, 5:20 மணிக்கு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அரை மணி நேரத்துக்கு மேல் பெய்ததால், சாலை, தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கொத்தாம்பாடி அம்மன் கோவில் அருகே இருந்த, 150 ஆண்டு பழமையான இச்சிலி மரம் வேருடன் முறிந்து விழுந்தது. அதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மொபட் சேதமானது.மின்தடைஆத்துார், நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மரக்கிளை ஆங்காங்கே முறிந்து விழுந்தன. சில இடங்களில் மின் கம்பிகள் மீது மரக்கிளை விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. நரசிங்கபுரத்தில் மாலை, 4:30 முதல், இரவு, 8:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது. சீரமைப்பு பணிக்கு பின், இரவு, 8:10 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது. அப்பமசமுத்திரத்தில் இரவு, 9:00 மணிக்கு மேலாகியும் மின்வினியோகம் வழங்கப்படவில்லை. சீரமைப்பு பணிக்கு பின் வழங்கப்படும் என, மின்வாரிய பணியாளர்கள் கூறினர். வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. ஆங்காங்கே தகர கொட்டாய்கள் சேதமாகின. தலைவாசல் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மணிவிழுந்தான், காட்டுக்கோட்டை, சார்வாய், சார்வாய்புதுார், பட்டுத்துறை உள்ளிட்ட கிராமங்களில் மாலை, 5:00 மணிக்கு கன மழை பெய்தது. சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரத்துக்கு மேல் கொட்டி தீர்த்தது.