வாகனங்கள் நிறுத்த ரூ.15 கட்டணம்; மருத்துவமனை ஊழியர்கள் அதிருப்தி
சேலம்: சேலம் அரசு மருத்துவமனைக்கு தினமும், 5,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன், துாய்மை பணியாளர்கள் உள்பட பல்வேறு துறைகளில் தற்காலிகம், நிரந்தரம் என, 1,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். மருத்துவமனை ஊழியர்கள், மக்கள் கொண்டு வரும் பைக், மொபட், கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த, ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கடந்த வாரம், மருத்துவமனை ஊழியர்களுக்கு வாட்ஸாப் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில், 'மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த, 15 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான அனுமதி சீட்டு பெற வேண்டும். மேலும், ஆர்.எம்.ஓ., அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி, பாஸ் பெற்றுக்கொள்ளலாம்' என கூறப்பட்டுள்ளது.மருத்துவமனை ஊழியர்கள் கூறுகையில், 'எங்கள் வாகனங்களை நிறுத்த, 15 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதை மருத்துவமனை நிர்வாகம் பரிசீலனை செய்து, பணியாளர்களிடம் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும்' என்றனர்.டீன் தேவிமீனாள் கூறுகை யில், ''மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஆண்டுதோறும் வாகனங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க, கட்டணம் வசூலிப்பது வழக்கமான நடைமுறைதான்,'' என்றார்.