| ADDED : பிப் 17, 2024 07:13 AM
பனமரத்துப்பட்டி : பனமரத்துப்பட்டி வட்டாரத்தில், 500 ஏக்கரில் குண்டுமல்லி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், நவம்பர், டிசம்பரில் செடிகளை கவாத்து செய்து பராமரித்தனர். தற்போது செடிகள் துளிர் விட்டு வளர்ந்து அரும்புகள் தோன்றியுள்ளன. மொக்கு வளர்ச்சி அடைந்து மலரும் தருணத்தில் உள்ளதால் சில நாட்களில் குண்டுமல்லி அறுவடை சீசன் தொடங்கும்.இந்நிலையில் செடிகளில் இலைப்பேன் நடமாட்டம் பரவலாக காணப்படுகிறது. அவை அரும்பு நிலையிலுள்ள இளம் மொக்குகளின் சாறு உறிஞ்சி உட்கொள்கின்றன. அதனால் மொக்கு வளர்ச்சியின்றி குருடுபோல் மாறி விடுவதால் மகசூல் பாதிக்கும் சூழல் உள்ளது. இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த வழி தெரியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.இதுகுறித்து பனமரத்துப்பட்டி தோட்டக்கலை உதவி இயக்குனர் குமரவேல் கூறுகையில், ''மல்லிகையில் இலைப்பேன், செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் தையோமித்தாக்சோம் அரை கிராம் கலந்து தெளிக்க வேண்டும். இல்லையெனில் ஒரு லிட்டர் நீரில் இமிடாகுளோபிரிட் அரை மில்லி, நனையும் கந்தகம், 2 கிராம் கலந்து தெளிக்க வேண்டும்,'' என்றார்.