வேளாண் திட்டங்களை எளிதில் பெற புது செயலி விரைவில் அறிமுகம்
சேலம்: தமிழகத்தில் வேளாண் அடுக்கக பணி, வேளாண், தோட்டக்கலை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்பணிக்கு விரைவில் அறிமுகமாகும், 'புது செயலி'யில், விவசாயிகள், வேளாண் தொடர்பான அனைத்து விபரத்தையும் உள்ளீடு செய்து பயன்பெறலாம்.விவசாயிகளுக்கு, அரசின் திட்டங்கள் விரைவில் சென்றடைவதை உறுதிப்படுத்த வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வருவாய் கிராமங்கள் வாரியாக, அனைத்து வட்டாரங்களிலும், மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று, விவசாயிகளுக்கென தனித்துவ அடையாள எண் வழங்கி, அதன் மூலமே, இனி அரசின் அனைத்து திட்டப்பலன்களும் வழங்கப்படும்.ஒருங்கிணைந்த வேளாண் தரவுத்தளம் மூலம், 24 துறைகளின் பயன்கள் கிடைக்கும். மேலும் அனைத்து துறையின் பயன்களை, ஒற்றைச்சாளர முறையில் பெறலாம். ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போதும், ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அதன்மூலம் அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடையும். வலைதளத்தில் நேரடியாக பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் பயன் பெறலாம்.ஆதார் எண் அடிப்படையில், விவசாயி வங்கி கணக்குக்கு நேரடி பணப்பரிவர்த்தனை செய்யப்படும். நில விபரத்துடன் இணைக்கப்பட்ட பதிவு விபரம் மூலம் கூட்டுறவு, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் எளிய முறையில் பயிர்கடன் பெறுவதோடு, இதுவரை அரசிடம் பெற்ற நன்மைகளை தெரிந்துகொள்ள முடியும். அதனால் ஒருங்கிணைந்த வேளாண் தரவு உள்ளீட்டு பணிகளை மேற்கொண்டு, அடையாள எண் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.