வனத்தில் துப்பாக்கியால் சுட்டு மாடு கொலை?
வனத்தில் துப்பாக்கியால் சுட்டு மாடு கொலை?ஓசூர் :அஞ்செட்டி அருகே, வனப்பகுதியில் வழித்தவறி சென்ற விவசாயி ஒருவரது, 5 மாடுகளில் ஒரு மாடு துப்பாக்கியால் சுடப்பட்டது போன்ற காயத்துடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே உளிபண்டா கிராமத்தை சேர்ந்த ராமப்பா,45; விவசாயி. கடந்த, 29 ல், 25 மாடுகளை மேய்ச்சலுக்காக கத்திரிக்காடு வனப்பகுதிக்கு ஓட்டி சென்றார். மீண்டும் மாலையில் வீட்டிற்கு மாடுகளுடன் திரும்பிய நிலையில், 5 மாடுகள் மட்டும் வழித்தவறி வனப்பகுதிக்குள் சென்றன. அவற்றை தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம், 3:00 மணக்கு, அர்த்தக்கல் கிராமத்தில் உள்ள கிரண்குமார் என்பவரது விவசாய நிலத்தில் ஒரு மாடு இறந்து கிடப்பதாக, ராமப்பாவிற்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று மாட்டை பார்த்த போது, துப்பாக்கியால் சுடப்பட்டது போன்ற காயம் இருந்தது. இது தொடர்பாக, அஞ்செட்டி போலீசில் நேற்று ராமப்பா புகார் செய்தார். கால்நடை மருத்துவ குழுவினர் மாட்டை உடற்கூராய்வு செய்தனர். அந்த அறிக்கை கிடைத்த பின், மாடு துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தெரியவரும் என, அஞ்செட்டி போலீசார் தெரிவித்தனர். அஞ்செட்டி பகுதியில் உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பயன்பாடு அதிகமாக உள்ளது. வேட்டைக்கு சென்ற மர்ம நபர்கள் மாட்டை சுட்டுக்கொன்றிருக்கலாம் என, போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். வழித்தவறி சென்ற மேலும், 4 மாடுகளையும் தேடி வருகின்றனர்.