சேலம்: சேலம், மூணாங்கரட்டை சேர்ந்த, ரவுடி பாஸ்கர், 43. இவரை, வெள்ளி வியாபாரி சங்கர் கொலை வழக்கில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் கடந்த பிப்ரவரியில் கைது செய்தனர். அன்னதானப்பட்டி ஸ்டேஷனில் ரவுடி பட்டியலில் உள்ள பாஸ்கர் மீது கிச்சிப்பாளையம், பள்ளப்பட்டி உள்பட மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், 20க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டதால், ஏற்கனவே 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.ஆனால் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதால், பாஸ்கரை, 10ம் முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய செவ்வாய்ப்பேட்டை போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டார். இதனால் சேலம் மத்திய சிறையில் உள்ள பாஸ்கர் மீது குண்டாஸ் பாய்ந்தது.அதேபோல் அவரது கூட்டாளி, களரம்பட்டியை சேர்ந்த வேலாயுதம், 30, மீது சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், 5க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் மீதும் குண்டாஸ் பாய்ந்தது.3ம் முறை
சேலம், கன்னங்குறிச்சி, தாமரை நகரை சேர்ந்தவர் அஜித்குமார், 27. இவர் மீது சேலம் மாநகர போலீஸ் ஸ்டேஷன்களில், 10க்கும் மேற்பட்ட வழிப்பறி, திருட்டு, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், 2023 ஜூலையில், தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஈட்டியம்பட்டி மாரியம்மன் கோவிலில், 3.5 கிலோ வெள்ளி கிரீடம், ஒரு பவுன் தங்க காசுகளை திருடியதால், அரூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இருமுறை குண்டாஸில் சிக்கிய இவரை, 3ம் முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, அழகாபுரம் போலீசார் பரிந்துரைத்தனர். அதையேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி நேற்று உத்தரவிட்டதால், சேலம் மத்திய சிறையில் உள்ள அஜித்குமார் மீது குண்டாஸ் பாய்ந்தது.