ஏற்காடு : -ஏற்காட்டில் நடந்த அடுப்பில்லா சமையல் போட்டியில் சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.சேலம் மாவட்டம் ஏற்காட்டில், 47வது கோடை விழா, மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றும் ஏராளமான சுற்றுலா பயணியர், அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சியை கண்டுகளித்தனர். கோடை விழாவின் ஒரு பகுதியாக, ஏரி பூங்காவில் சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் மக்கள், சுற்றுலா பயணியருக்கு, அடுப்பில்லா சமையல் போட்டி நடந்தது. அதில் சுற்றுலா பயணியர் பங்கேற்றனர். அடுப்பு, எண்ணெய் இல்லாமல் காய்கறி, பழ வகைகள், தேன், நவதானியங்களை பயன்படுத்தி, 30 நிமிடத்தில் சமைக்க வேண்டும். போட்டி தொடங்கியதும் சுற்றுலா பயணியர் ஆர்வமுடன் சமைத்தனர். மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி, போட்டியாளர்கள் சமைத்த உணவுகளை ருசி பார்த்து, வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தார்.அதன்படி செங்கல்பட்டை சேர்ந்த நித்யா, சென்னை, அம்பத்துாரை சேர்ந்த சினேகா, செங்கல்பட்டை சேர்ந்த, 12 வயது சிறுவன் நிதீஷ் ஆகியோர் முறையே, முதல் மூன்று இடங்களை பெற்றனர். மேலும் போட்டியாளர் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ், சமூக நலத்துறை சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் உள்பட பலர் பங்கேற்றனர்.இன்று என்ன?இன்று காலை, 6:30 மணிக்கு, சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டியில் இருந்து குண்டூர் வழியே ஏற்காடு வரை மலையேறும் போட்டி நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு ஏற்காடு சூழல் சுற்றுலா பூங்காவில் சைக்கிள் ஓட்டம் நடக்கிறது. மேலும் நேற்று நடக்கவிருந்த ஆண்கள் கால்பந்து போட்டி, பெண்களுக்கு பந்து வீசுதல் போட்டி மட்டுமின்றி, 50 மீ., ஓட்டம், குண்டு எறிதல், நின்று நிலை தாண்டுதல், கயிறு இழுத்தல் போட்டிகள், இன்று காலை, 10:00 மணிக்கு ஏற்காடு மான்போர்ட் பள்ளி மைதானத்தில் நடக்கிறது.