பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்: ஆசிரியர் இடமாற்றம் ரத்து
பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்: ஆசிரியர் இடமாற்றம் ரத்துதாரமங்கலம், நவ. 29-மாணவர்களை அனுப்பாமல், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டதால், பட்டதாரி ஆசிரியர் இடமாற்றம் ரத்து செய்யப்பட்டது.சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே வனிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமையாசிரியராக ஆசைதம்பி உள்ளார். அங்கிருந்த, ஆங்கில ஆசிரியர் பிரான்சிஸ் ஜெரார்டை அரியாம்பட்டி பள்ளிக்கும், அங்கிருந்த பட்டதாரி ஆசிரியர் சீதாராமனை, வனிச்சம்பட்டிக்கும் இடமாறுதல் செய்து, தாரமங்கலம் மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ(தொடக்க கல்வி) நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.இதை அறிந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. தொடர்ந்து பள்ளியை முற்றுகையிட்டனர். மாணவர்களும், 'மீண்டும் ஆங்கில ஆசிரியர் வேண்டும்' என, பதாகைகள் ஏந்தி கோஷம் எழுப்பினர். உடனே தாரமங்கலம் போலீசார் வந்தனர். தொடர்ந்து வட்டார கல்வி அலுவலர் வாசுகி பேச்சு நடத்தினார். அப்போது, 'பிரான்சிஸ் ஜெரார்டு இதே பள்ளியில் பணிபுரிய, மாவட்ட கல்வி அதிகாரி நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்' என்றார். இதனால் காலை, 11:00 மணிக்கு, மாணவர்களை, பெற்றோர் பள்ளிக்கு அனுப்பினர். சிறிது நேரத்தில் பிரான்சிஸ் ஜெரார்டு, வனிச்சம்பட்டி பள்ளிக்கு வந்து பணியை தொடர்ந்தார்.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில், 'ஆசிரியர், எங்கள் குழந்தைகளுக்கு நன்கு ஆங்கிலத்தில் எழுத, படிக்க பாடம் நடத்துகிறார். பள்ளிக்கும் உதவி செய்து வரும் அவர், இதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய வேண்டும்' என்றனர்.