பா.ம.க., - எம்.எல்.ஏ.,வை கண்டித்து கோஷம் அன்புமணி ஆதரவாளர் 42 பேர் மீது வழக்கு
ஆத்துார், பா.ம.க., நிர்வாகிகளை சந்திக்க வந்த, எம்.எல்.ஏ., அருளை கண்டித்து, அன்புமணி ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பியதால், அவர் புகார்படி, 42 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பா.ம.க., மாநில இணை பொதுச்செயலர், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள்(ராமதாஸ் ஆதரவாளர்). இவர் வரும், 26ல், சேலத்தில் நடக்க உள்ள, பா.ம.க., பொதுக்குழு கூட்ட ஏற்பாடு குறித்து, ஆத்துார், ராணிப்பேட்டை சாலையில் உள்ள பயணியர் மாளிகையில், கிழக்கு மாவட்ட செயலர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன், நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.இதை அறிந்து, அன்புமணி ஆதரவாளரான, சேலம் கிழக்கு மாவட்ட செயலர் ஜெயபிரகாஷ் தலைமையில், 50க்கும் மேற்பட்டோர், பயணியர் மாளிகையை முற்றுகையிட்டு, எம்.எல்.ஏ., அருளை கண்டித்தும், அன்புமணியை அவதுாறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கக்கோரியும் கோஷம் எழுப்பினர். ஆத்துார் டவுன் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.தொடர்ந்து, ஆத்துார் டி.எஸ்.பி., அலுவலகத்தில், ஜெயபிரகாஷ் தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர். அதில், 'பா.ம.க.,வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் எம்.எல்.ஏ., அருள் மற்றும் மாவட்ட செயலர் நடராஜன் உள்ளிட்டோர், அன்புமணி குறித்து அவதுாறு கருத்துகளை பேசி வருகின்றனர். அவர்கள் கட்சி கொடி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது' என கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து அருள், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனுவில், ''மத்துார் பாலம் அருகே ஜெயபிரகாஷ் தலைமையில் பலர், ஆயுதங்களுடன் நின்று என் வாகனத்தை வழிமறித்தனர். நிற்காமல் ஆத்துார் வந்துவிட்டேன். ஆத்துார் பயணியர் மாளிகை முன், 30க்கும் மேற்பட்டோர், 'கொல்லாமல் விடமாட்டோம்' என கூறி, என்னை தாக்கவும், கொல்லவும் முயன்றனர். எனக்கும், மாவட்ட செயலர் நடராஜனுக்கும் அச்சுறுத்தல் உள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து அன்புமணி ஆதரவு நிர்வாகிகளான ஜெயபிரகாஷ், வன்னியர் சங்க மாவட்ட தலைவர் சங்கர், பசுமை தாயக மாவட்ட செயலர் கவுதம், ஆத்துார் வடக்கு நகர செயலர் குமரேசன் உள்பட, 42 பேர் மீது, கொலை மிரட்டல், தகாத வார்த்தையில் திட்டுதல் உள்பட, 4 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர்.