முதல்வர் வீட்டில் திருட்டு தனியார் ஊழியர் கைது
ஆத்துார்:ஆத்துார் அருகே வடசென்னிமலையை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு கல்லுாரி முதல்வராக உள்ளார். இவரது வீட்டில், கடந்த ஜன., 24ல் புகுந்த மர்ம நபர்கள், 25 பவுன் நகையை திருடிச்சென்றனர். ஆத்துார் ஊரக போலீசார், 4 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான, செங்கல்பட்டை சேர்ந்த, ரவுடியான, 'சுக்குகாபி' சுரேஷ், 26, என்பவர், கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்ததால், அவரை, 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, செங்கல்பட்டு, வல்லத்தை சேர்ந்த, தனியார் கார் நிறுவனத்தில் பெயின்ட் அடிக்கும் வேலை செய்யும் சஞ்சய், 23, என்பவர், இத்திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. நேற்று சஞ்சயை போலீசார் கைது செய்தனர். அவரிடம், ஒன்றரை பவுன் நகை பறிமுதல் செய்ததாக, போலீசார் தெரிவித்தனர்.