மதுக்கடைக்கு எதிராக 2ம் நாளாக போராட்டம்
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன் பாளையம் அடுத்த சின்னகல்வராயன் மலை, வடக்குநாடு ஊராட்சி சேர்வாய்பட்டில், நேற்று முன்தினம் அரசு டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்-பகுதி மக்கள், மதுக்கடை முன் அமர்ந்து போராட்டம் செய்தனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால், மக்கள் கலைந்து சென்றனர். ஆனால் நேற்றும் கடை திறக்கப்பட்டது. இதனால் காலை, 11:00 மணி முதல், மாலை, 4:00 மணி வரை கடை முன் அமர்ந்து, 2ம் நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய்த்துறையினர், போலீசார், பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் மக்கள் கலைந்து சென்றனர்.