ரூ.15 கோடி மதிப்பு கோவில் நிலம் மீட்பு
இடைப்பாடி:சேலம் மாவட்டம் இடைப்பாடி வெள்ளரிவெள்ளி அருகே வெள்ளகவுண்டனுாரில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு அதே பகுதியில், 9 ஏக்கர் 27 சென்ட் நிலம் உள்ளது. அந்த நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபம் கட்டியுள்ள சிலர் வாடகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கின்றனர்.அந்த இடத்தை காலி செய்ய 2017ல் அறநிலையத்துறை மூலம் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கோவில் நிலம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதைத் தொடர்ந்து, சேலம் மாவட்ட அறநிலையத்துறை உதவி கமிஷனர் ராஜா, கோவில் நிலங்கள் மீட்பு தனி தாசில்தார் பாலாஜி, இடைப்பாடி போலீசார் கோவில் நிலத்தை நேற்று முன் தினம் மீட்டனர். அதைத் தொடர்ந்து, 'அறநிலையத் துறைக்கு சொந்தமானது' என்ற அறிவிப்புப் பலகை அங்கு வைக்கப்பட்டது.மீட்கப்பட்ட நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு, 15 கோடி ரூபாய் என வருவாய்த் துறை அதிகாரிகள் கூறினர்.