ஆர்.டி.ஓ., குறித்து சர்ச்சை பதிவு; வி.சி., - மா.செ., செயலால் அதிருப்தி
ஆத்துார்: சேலம் மாவட்டம் ஆத்துார், கெங்கவல்லி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலை, ஆத்துார் ஆர்.டி.ஓ., பிரியதர்ஷினி, நேற்று முன்தினம் வெளியிட்டார். அதில் வி.சி., கட்சியினருக்கு அழைப்பு விடுக்கவில்லை என, அக்கட்சியின் சேலம் கிழக்கு மாவட்ட செயலர் கருப்பையா தலைமையிலானோர், ஆர்.டி.ஓ.,விடம் கேட்டு வாக்குவாதம் செய்தனர்.இந்நிலையில் நேற்று கருப்பையா, அவரது பேஸ்புக் மற்றும் வாட்ஸாப் குழுக்களில், 'ஆத்துார் ஆர்.டி.ஓ., மனநலம் பாதித்தவர். தமிழக அரசு, அவரை பதவியில் இருந்து நீக்கவேண்டும்' என, குறிப்பிட்டு தகவல் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது வருவாய்த்துறையினிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து கருப்பையா நிருபர்களிடம் கூறுகையில், ''வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, 4 தாலுகாவை சேர்ந்த, வி.சி., நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கவில்லை. ஆர்.டி.ஓ.,விடம் கேட்டபோது அலட்சியமாக பேசினார். வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை விடமாட்டோம்,'' என்றார்.பிரியதர்ஷினி கூறுகையில், ''வி.சி., கட்சிக்கு தகவல் அளித்ததற்கு ஆதாரம் உள்ளது. ஆனால் அக்கட்சி மாவட்ட செயலர், தகவல் தெரிவிக்கவில்லை என்கிறார். என்னைப்பற்றி அவதுாறாக பதிவிடும் தகவலுக்கு பதிலளித்து கொண்டிருந்தால் அரசு பணி பாதிக்கும். இதுதொடர்பாக, கலெக்டருக்கு தகவல் அளித்துள்ளோம்,'' என்றார்.