தொழிலாளி தற்கொலை விவகாரம் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்
ஆத்துார்,:தொழிலாளி தற்கொலை விவகாரத்தில், போலீசார் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர், உடலை பெற்றுக்கொண்டனர்.சேலம் மாவட்டம் ஆத்துார், முல்லைவாடியை சேர்ந்தவர் நாகராஜன், 32. ஆத்துார், உழவர் சந்தையில் மூட்டை துாக்கும் தொழிலாளியாக பணிபுரிந்தார். கடந்த, 6ல், அவர், 'போதை'யில் இருந்ததால், வேளாண் அலுவலர் சுரேந்தர், வீட்டுக்கு செல்லும்படி, 'மைக்' மூலம் அறிவித்தார். இதையடுத்து நாகராஜன், வீட்டுக்கு சென்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வேளாண் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, உறவினர்கள், ஆத்துார் அரசு மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக, 40 பேர் மீது ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று முன்தினம், தொழிலாளி உடலை வாங்க, உறவினர்கள் மறுத்துவிட்டனர். நேற்று, 2ம் நாளாக, போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது அவர்கள், 'தொழிலாளியின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவர்களது குழந்தைகள், தொடர்ந்து படிக்க அரசு உதவிட வேண்டும். வேளாண் அலுவலர் சுரேந்தரை இடமாறுதல் செய்ய வேண்டும்' என கூறினர். அதற்கு போலீசார், 'கலெக்டர் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்' என்றனர். பின் பிரேத சோதனைக்கு கையெழுத்திட்டனர். தொடர்ந்து மாலை, 6:30 மணிக்கு, நாகராஜன் உடலை, அவரது குடும்பத்தினர் பெற்றுச்சென்று, அடக்கம் செய்தனர்.