உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / பருவநிலை மாற்றத்தால் அதிர்ச்சி வெயிலின் தாக்கம் சேலத்தில் அதிகரிப்பு

பருவநிலை மாற்றத்தால் அதிர்ச்சி வெயிலின் தாக்கம் சேலத்தில் அதிகரிப்பு

சேலம்:சேலத்தில், நான்கு நாட்களாக கோடை வெயிலுக்கு இணையாக வெயில் கொளுத்துவதால், மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் மே, ஜூன் மாதங்களில் கோடை வெயில் கொளுத்துவது வழக்கம். தற்போது முடிந்த கோடைக்காலத்திலும், கடந்த ஆண்டை காட்டிலும் அதிக வெயில் சேலத்தில் காணப்பட்டது. ஆண்டுக்காண்டு, வெயில் அதிகரித்து வருவது இயற்கை ஆர்வலர்களை கவலைக்குள்ளாக்கி வந்தது.கோடை விடுமுறை முடிந்து, இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையில், தற்போது அடை மழை மற்றும் பனிக்காலம் துவங்க உள்ளது. இந்நிலையில் சில நாட்களாக சேலத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடைக்காலத்தில் வரும் அக்னி நட்சத்திர காலகட்டத்தில், இருக்கும் வெயிலின் தாக்கம் தற்போது காணப்படுகிறது.மதிய நேரத்தில் பொசுக்கும் வெயிலால், கடும் புழுக்கமும், வெளியில் தலைகாட்ட முடியாத அளவுக்கு அனல் காற்றும் வீசுகிறது. இதன் தாக்கம் இரவு நேரத்திலும் காணப்படுகிறது. பொதுவாக இந்த காலகட்டத்தில், பகலில் சிறிது வெயில் அதிகரித்தாலும், மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்வது வழக்கமாக இருக்கும். ஆனால், நான்கு நாட்களாக வெயில் கடுமையாக கொளுத்தியும், இரவு நேரத்தில் கடும் மழை எதுவும் இல்லை.இதனால் இரவு நேரத்தில் கடும் புழுக்கத்தால், மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஃபேன் ஓடிக்கொண்டிருந்தாலும், வியர்வை வழியும் அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. அதிக பட்சமாக கடந்த செப்டம் 27ம் தேதி 97.16 டிகிரி பாரன்ஹீட் வெயில் அடித்துள்ளது.திடீரென பருவநிலை மாறி, அதிக வெயில் அடிப்பதால், மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. மீண்டும் கோடைக்காலம் துவங்கிவிட்டதோ என்ற தயக்கமும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:குளிர் காலம் துவங்க உள்ள இந்த காலகட்டத்தில் பொதுவாக, 95 டிகிரியை வெயில் அளவு தாண்டாது. ஆனால் தற்போது ஓரிரு நாட்களில் திடீரென வெயில் அதிகரித்துள்ளது. இதற்கு உலக வெப்பமயமாதலும் ஒரு காரணமாக இருக்கக்கூடும். மழைக்குறைவு, காற்றின் திசை மாற்றம் உள்ளிட்ட காரணங்களாலும் வெப்பம் அதிகரித்திருக்கலாம். ஆனால், இதே நிலை தொடர வாய்ப்பில்லை. ஓரிரு நாட்களில் வெயிலின் தாக்கம் குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ