உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / வருவாய் இழப்புக்கு சேர்மனே காரணம் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

வருவாய் இழப்புக்கு சேர்மனே காரணம் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

ஆத்தூர்: ''ஆத்தூர் நகராட்சி வருவாய் இழப்புக்கு, தி.மு.க.,வை சேர்ந்த சேர்மன் தான் காரணம். மேலும், ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்டினை, நகராட்சி அனுமதி இல்லாமல், மினி பஸ் நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளதால், வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,'' என, தி.மு.க., நகர்மன்ற குழு தலைவர் குற்றச்சாட்டு எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர் நகராட்சி கவுன்சில் கூட்டம், சேர்மன் பூங்கொடி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:

காங்., கவுன்சிலர் திருஞானம்: சட்டசபை தேர்தலின்போது, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதாக, அ.தி.மு.க.,வினர் தேர்தல் அறிக்கை விட்டனர். தற்போது, அ.தி.மு.க., ஆட்சி அமைந்தபோதும், 16 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. குடிநீர் சப்ளை காலதாமதத்துக்கு காரணம் தெரிவிக்க வேண்டும். நகராட்சி கமிஷனர்

(பொறுப்பு) ராமகிருஷ்ணன்: சராசரியாக, 28 லட்சம் லிட்டர் குடிநீர் சப்ளை வருகிறது. அதகேற்ற அளவில் வார்டுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது.

கவுன்சிலர் திருஞானம்: இதே நிலை நீடித்தால், 15 நாட்களுக்கு மேல் தான் குடிநீர் கிடைக்கும் என, கவுன்சிலர்கள் சார்பில் நோட்டீஸ் அடித்து பொதுமக்களுக்கு வழங்குவோம்.

தி.மு.க., கவுன்சிலர் வேல்முருகன்: மாநகராட்சி, நகராட்சி வார்டுகளில் குடிநீர் லைனில், முறைகேடாக மின்மோட்டர் பயன்படுத்த கூடாது என, மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார். ஆனால், ஆத்தூர் நகராட்சி வார்டுகளில் மின்மோட்டார் வைத்து தண்ணீர் பிடிப்பது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

தி.மு.க., கவுன்சிலர்கள்: நகராட்சி வார்டுகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கி விட்டு மின்மோட்டார் பறிமுதல் செய்ய வேண்டும். அதுவரை மின்மோட்டார் பறிமுதல் செய்யக்கூடாது.

தி.மு.க., நகர்மன்ற குழு தலைவர் ஸ்டாலின்: ஆத்தூர் பழைய பஸ் ஸ்டாண்ட் காலியாக உள்ள நிலையில், நகராட்சி அனுமதி இல்லாமல் மினி பஸ்கள் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனி நபருக்காக, வணிக வளாகமாக மாற்ற வேண்டிய பஸ் ஸ்டாண்டை, மினி பஸ்கள் நிறுத்துவதால் வருவாய் கிடைக்காது. நகராட்சியின் வருவாய் இழப்புக்கு தி.மு.க.,வினர் தான் காரணமாக உள்ளனர். அதில், நகராட்சி சேர்மனால் (பூங்கொடி), வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தி.மு.க., காங்., கவுன்சிலர்கள், நகராட்சி சேர்மன் பூங்கொடியிடம், கடும் வாக்குவாதம் செய்தபடி இருந்ததால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை