சேலம்: சேலம் மாநகராட்சி தேர்தலில், மேயர் பதவிக்கு போட்டியிட, அ.தி.மு.க., வேட்பாளர் சவுண்டப்பன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். சேலம் மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக, அ.தி.மு.க., சார்பில் சவுண்டப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை, 10.30 மணிக்கு, கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் புடை சூழ, பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். அங்கிருந்து ஊர்வலமாக, சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்துக்கு காலை, 11.30 மணிக்கு வந்தார். மாநகராட்சி மைய அலுவலகத்தில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. குறிப்பிட்ட சில நிர்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். சவுண்டப்பனுடன், அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ., ரவிச்சந்திரன் ஆகியோர், மாநகராட்சி கமிஷனர் அறைக்கு சென்றனர்.
அவர்களுடன், அ.தி.மு.க., வை சேர்ந்த ஒரு சிலர் உள்ளே சென்றனர். கமிஷனர் அறைக்குள், 10 க்கும் மேற்பட்டவர்கள் இருந்ததால், 'ஐந்து பேருக்கு மேல் இருந்தால், என்னால் வேட்பு மனுவை பெற முடியாது. அதனால், ஒரு சிலரை வெளியேற்றுங்கள்' என்று கமிஷனர் லட்சுமிப்பிரியா, அமைச்சர் இடைப்பாடி பழனிசாமியிடம் கூறினார். அமைச்சர் கூறியதை தொடர்ந்து, உள்ளே இருந்த கட்சி நிர்வாகிகள் வெளியேறினர். பிறகு, சவுண்டப்பன், மாநகராட்சி கமிஷனர் லட்சுமிப்பிரியாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பிறகு, அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முக்கிய நிர்வாகிகள் எனக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மாநகராட்சி மேயராக தேர்வு செய்யப்பட்டால், கிச்சிப்பாளையம் குப்பைமேடு பகுதியை முற்றிலும் அகற்றி, சுகாதாரத்தை மேம்படுத்துவேன். மாநகராட்சி பகுதியில், நிச்சயம் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு கூறினார்.