பிளஸ் 2 தேர்வில்
11 கைதிகள் தேர்ச்சி
சேலம்: பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்ற, சேலம் மத்திய சிறை கைதிகள், 11 பேரை அதிகாரிகள் பாராட்டினர்.தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில், சேலம் மத்திய சிறை கைதிகள், 11 பேர் தேர்வு எழுதினர். நேற்று முடிவுகள் வெளியான நிலையில், தேர்வு எழுதிய, 11 கைதிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில் தண்டனை கைதி ராமலிங்கம், 600க்கு, 409 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், கண்ணன், 400 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், வெங்கடேஷ், 391 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றனர்.சேலம் சிறை கண்காணிப்பாளர் வினோத், மனஇயல் நிபுணர் வைஷ்ணவி, நல அலுவலர் அன்பழகன், துணை சிறை அலுவலர் சிவா ஆகியோர், தேர்ச்சி பெற்ற கைதிகள், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
பணம் செலுத்தி ஏமாந்தோர்
முற்றுகை போராட்டம்
சேலம்: சேலம், வீராணத்தை சேர்ந்தவர் சபரிசங்கர், 45. இவர், சேலம் உள்பட, 11 இடங்களில், 'எஸ்.வி.எஸ்.,' பெயரில் நகை கடை நடத்தினார். இவர் அறிவித்த திட்டங்களை நம்பி பலர் பணம் செலுத்தினர். ஆனால் பணம், நகையை திரும்ப வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வந்த அவர், கடந்த மாதம் கடையை பூட்டிவிட்டு தலைமறைவானார். இதுகுறித்து பாதிக்கப்பட்டோர் புகார்படி, மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில், 100 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்தது தெரியவந்ததால், வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. சபரிசங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.பணம் செலுத்தி ஏமாந்தவர்கள் நேற்று காலை வீராணத்தில் உள்ள சபரிசங்கர் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த வீராணம் போலீசார், பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.18 பவுன் நகை மீட்பு
திருடிய 2 பேர் கைது
சேலம்: சேலம், இரும்பாலை அருகே, பெருமாம்பட்டி, கோவில்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், 28. சீலநாயக்கன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த, 30ல் வீட்டை பூட்டிச்சென்றார். பின் வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 18.5 பவுன் நகைகள் திருடுபோனது தெரிந்தது.அவர் புகார்படி, இரும்பாலை போலீசார் விசாரித்து, தாரமங்கலம் அடுத்த மேட்டுப்பட்டி, எம்.ஜி.ஆர்., காலனியை சேர்ந்த ரமேஷ், 30, பெருமாள், 40, ஆகியோரை கைது செய்தனர். மணிகண்டன் வீட்டில் திருடியதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம், 18.5 பவுன் நகையை போலீசார் மீட்டனர்.