ஆர்.டி.ஓ., பேச்சில் சமரசம் பள்ளிக்கு திரும்பிய மாணவர்கள்
மேட்டூர், கொளத்துார், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவு அடுத்த புதுகுண்டுகாட்டை சேர்ந்த சித்தன் மகன் பார்த்திபன், 15. இவர், ராமன்பட்டி உறைவிட பள்ளியில் படித்த நிலையில், கடந்த, 30ல் அருகே உள்ள கிணற்றில் குளிக்க சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்தார். அவரது குடும்பத்துக்கு, தமிழக அரசு நிவாரண நிதி, 3 லட்சம் ரூபாய் வழங்கியது. மேலும் ஆசிரியர் குமார், 3 சமையலர், ஒரு துாய்மை பணியாளர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இதர மாணவர்கள், கடந்த, 4, 5ல் வகுப்புகளுக்கு செல்லாமல் புறக்கணித்தனர். 3ம் நாளாக நேற்றும், பள்ளிக்கு செல்லாமல், அதன் வளாகத்தில் அமர்ந்து புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மதியம், மேட்டூர் ஆர்.டி.ஓ., சுகுமார், தாசில்தார் ரமேஷ், மாணவர்களின் பெற்றோருடன் பேச்சு நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, வகுப்புகளுக்கு சென்றனர்.