உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / சேலத்தில் மகன், மகள் உயிரை பலி வாங்கிய தந்தையின் ஆசை; கொலைக்கு உடந்தையாக இருந்தவர் கைது கோரி மறியல்

சேலத்தில் மகன், மகள் உயிரை பலி வாங்கிய தந்தையின் ஆசை; கொலைக்கு உடந்தையாக இருந்தவர் கைது கோரி மறியல்

சேலம்: சேலத்தில் தந்தையின் விபரீத ஆசை, மகன் மற்றும் மகள் உயிரை பலி வாங்கிய நிலையில், கொலைக்கு உடந்தையாக இருந்தவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அடுத்த ஒடுவங்காட்டை சேர்ந்த விவசாயி ராஜா, 40. இவரது மகள், பிளஸ் 2 மாணவி நவீனா, 17, மகன், 9ம் வகுப்பு மாணவர் சுகன், 14. இவர்கள் நேற்று முன்தினம் மாலை வீடு அருகே உள்ள தோட்டத்தில் கழுத்தறுபட்டு இறந்து கிடந்தனர்.ராஜாவின் தம்பி உறவு முறை கொண்ட அதே பகுதியை சேர்ந்த, விவசாயி தனசேகரன், 33, கொலை செய்தது தெரிந்தது. பனமரத்துப்பட்டி போலீசார், 2 பேரின் உடல்களை கைப்பற்றி, சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பினர். போலீசார், தனசேகரன் உள்ளிட்ட குடும்பத்தினரை பிடித்து அவர்களிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், 'கொலையில் தனசேகரனுக்கு உதவியாக இருந்த அவரது மச்சான் கார்த்திக், 27, என்பவரையும் கைது செய்ய வேண்டும். அப்போது தான் உடலை பெற்றுக்கொள்வோம்' என ராஜா உள்ளிட்ட உறவினர்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து நேற்று மதியம், கலெக்டர் அலுவலகம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் ஊரக டி.எஸ்.பி., தேன்மொழிவேல் உள்ளிட்ட போலீசார் பேச்சு நடத்தினர். உரிய விசாரணைக்கு பின் கார்த்திக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று, ஒரு மணி நேர மறியலை கைவிட்டனர்.பின், மா.கம்யூ., மாவட்ட செயலர் சண்முகராஜா தலைமையில் உறவினர்கள், சேலம் எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர். அதில், 'கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியிருந்தனர். மாலை, 5:30 மணிக்கு இருவரின் உடல்களை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் ராஜாவின் தகாத உறவே அவரது மகள், மகன் படுகொலைக்கு காரணம் என தெரிந்தது.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சம்பவ நாளில் தனசேகரின் மனைவி, வீட்டில் தனியே இருந்தபோது, அவரை தகாத உறவுக்கு, ராஜா அழைத்துள்ளார். அவர் விரட்டி உள்ளார். இச்சம்பவத்தை தனசேகரனிடம் கூற, அவர் ராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர், 'உனக்கு அவமானமாக இருந்தால் ஊரை காலி செய்துபோய்விடு' என கூறியுள்ளார்.இதனால் தோட்டத்தில் பூ பறித்து கொண்டிருந்த சுதனிடம், 'உன் தந்தை தவறாக நடப்பது நியாயமா?' என, தனசேகரன் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட, ஆத்திரமடைந்த தனசேகரன், இரும்பு ராடால் சுதனை தாக்கி கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த நவீனா, கொலையை பார்த்துவிட்டதால், அவரையும் கழுத்தறுத்து தீர்த்துக்கட்டினார். பின் அங்கு வந்த ராஜாவையும் தலையில் தாக்கிவிட்டு தனசேகரன் தப்பிச்சென்றார். அவரை கைது செய்து, மேல் விசாரணை நடக்கிறது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி