பிரதமர் நிதி உதவி திட்டத்தில் சேர தனித்துவ அடையாள எண் கட்டாயம்
சேலம், சேலம் கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கை:விவசாயிகளுக்கு பிரதமர் கவுரவ நிதி உதவி திட்டத்தில் ஆண்டுக்கு, 3 தவணைகளில், 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் நிதி உதவி பெற தனித்துவ விவசாய அடையாள எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் உள்ள எந்த விவசாயியும், இதில் விடுபட்டு விடக்கூடாது என்பதால், அனைத்து விவசாயிகளும் தனித்துவ அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில், இத்திட்ட பயனாளிகளில், 26,542 பேர் இதுவரை அடையாள எண் பெறாமல் உள்ளனர். அவர்களுக்கு நவம்பரில் வழங்கப்பட உள்ள, 21வது தவனை தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால் அனைத்து விவசாயிகளும் உடனே அருகிலுள்ள வேளாண், தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டோ, பொது சேவை மையங்களில் சிட்டாவில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணுடன் சென்று, பதிவு செய்து கொள்ள வேண்டும்.அதேபோல் முன்னோர்களின் பெயரில் பட்டா உள்ளவர்கள், தங்கள் பெயரில் சிட்டா பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து, தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பிரதமர் கவுரவ நிதி உதவி பெற முடியும்.