கண்ணுக்கு தெரியும் கடவுள் தாய்மார்கள் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேச்சு
பனமரத்துப்பட்டி மாற்று கட்சிகளில் இருந்து விலகியோர், தி.மு.க.,வில் இணையும் விழா, மல்லுார் டவுன் பஞ்சாயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட செயலரான, ராஜ்யசபா எம்.பி., சிவலிங்கம் வரவேற்றார். எம்.பி., செல்வகணபதி முன்னிலை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேசினார்.அதில் மல்லுார் டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் அய்யனார் ஏற்பாட்டில், 14வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் தினேஷ், அ.தி.மு.க., இளைஞரணி முன்னாள் தலைவர் மகேந்திரன், பா.ம.க., முன்னாள் தலைவர் குழந்தைவேல் உள்பட, 2,100 பேர், தி.மு.க.,வில் இணைந்தனர்.அவர்களை வரவேற்று, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது: தன் கையே தனக்கு உதவி என, தாய்மார்கள், மகளிர் சுய உதவி குழு நடத்திக்கொண்டிருக்கின்றனர். முதல்வராக இருந்த கருணாநிதி, தர்மபுரியில் முதலில் மகளிர் சுய உதவி குழு உருவாக்கி தந்தார். தற்போதைய முதல்வர் ஸ்டாலின் போடும் திட்டங்கள் எல்லாம், தாய்மார்களுக்காகவே இருக்கின்றன. தாய்மார்களுக்கு செய்யும் திட்டம் எதுவாக இருந்தாலும் கடவுளுக்கு செய்யும் திட்டம். கண்ணுக்கு தெரியும் கடவுள் தாய்மார்கள்தான். அவர்களுக்குத்தான், முதல்வர் தொடர்ந்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.இவ்வாறு அவர் பேசினார்.மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா, தி.மு.க.,வின், சேலம் கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், ஒன்றிய செயலர் உமாசங்கர், பனமரத்துப்பட்டி நகர செயலர் ரவிக்குமார், மல்லுார் டவுன் பஞ்சாயத்து தலைவி லதா உள்பட பலர் பங்கேற்றனர்.