வருகை தந்து கற்றுக்கொள்ளுங்கள்:தீயணைப்புத்துறை விழிப்புணர்வு
சேலம்:தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில், 375 தீயணைப்பு நிலையங்களில், நேற்றும், இன்றும், மக்களுக்கு தீ தடுப்பு, அதன் பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த, அரசு சார்பில் உத்தரவிடப்பட்டது. அதன்படி சேலம், சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்தில் நேற்று, 'வருகை தந்து கற்றுக்கொள்ளுங்கள்' எனும் பெயரில், விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட தீயணைப்பு அலுவலர் மகாலிங்க மூர்த்தி தொடங்கிவைத்தார்.உதவி அலுவலர் பாலகிருஷ்ணன், நிலைய அலுவலர் உதயகுமார், அத்யாவசிய தீ தடுப்பு முறைகள், விபத்து ஏற்பட்டால் அருகே உள்ள பொருட்களால் எவ்வாறு அணைப்பது, தீ பரவாமல் தடுக்கும் முறை, தீயணைப்புத்துறை செயல்பாடு குறித்து, மக்களுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. காலை, 10:00 முதல், 11:00 மணி; மதியம், 12:00 முதல், 1:00 மணி; மாலை, 4:00 முதல், 5:00 மணி வரை என, 3 கட்டங்களாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இவற்றில், 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது.அதேபோல் மேட்டூர் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில் வீரர்கள், அரசு சார்பில் வழங்கிய உபகரணங்கள் மூலம், 'தீ பாதுகாப்பு அறிவோம், உயிர்களை காப்போம்' தலைப்பில், அதன் வளாகத்தில், மக்களுக்கு பயிற்சி அளித்தனர். அப்போது தீ விபத்து, அதை உடனே எப்படி அணைப்பது என, செயல்விளக்கம் அளித்தனர்.ஆத்துார் தீயணைப்பு நிலைய வளாகத்தில் நிலைய அலுவலர் அசோகன், தீ தடுப்பு வழிமுறை, தீ தடுப்பு பணியில் வீரர்கள் பயன்படுத்தும் கருவிகள் உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கம் அளித்தார். அதேபோல் சங்ககிரி தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார், தீ தடுப்பு குறித்து பேசினார்.