| ADDED : மார் 03, 2024 07:52 AM
சேலம், : சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் வழங்குதல் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. அதில் தலைமை வகித்து கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:கோடை காலம் தொடங்கிய நிலையில் குடிநீர் வினியோகம் முறையாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும்படி, அலுவலர்கள் தனி கவனம் செலுத்தி பணிபுரிய வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு நீரேற்றும் மின் மோட்டார்களை நன்றாக பராமரிப்பது அவசியம். நீரேற்று நிலையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். குடிநீர் வினியோக செயல்பாடு தொடர்பாக கண்காணிக்க, அலுவலர்களை ஒருங்கிணைத்து, 'வாட்ஸாப்' குழு உருவாக்கி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக மக்கள், கலெக்டர் அலுவலகத்தில், 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை, 1077 என்ற எண்ணிலோ, 0427 - -2450498 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை(வளர்ச்சி), உதவி இயக்குனர் சங்கமித்திரை(ஊராட்சி), குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் பிரபாகரன், மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து, ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.