உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சேலம் / தேவூர் சரபங்கா ஆறு தடுப்பணையில் பாலம் கட்டப்படுமா? 50 ஆண்டுகளாக குரல் கொடுத்தும் அதிகாரிகள் பாராமுகம்

தேவூர் சரபங்கா ஆறு தடுப்பணையில் பாலம் கட்டப்படுமா? 50 ஆண்டுகளாக குரல் கொடுத்தும் அதிகாரிகள் பாராமுகம்

சங்ககிரி:சங்ககிரி தாலுகா, தேவூரில் உள்ள சரபங்கா ஆறு தடுப்பணையில், தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் தடுப்பணை முழுவதும் பாசிகள் படர்ந்து சறுக்கும் அணையாக மாறியுள்ளது. அதனால், ஆபத்தான முறையில் அப்பகுதியினர் தடுப்பணையை கடந்து செல்கின்றனர். கிராம மக்கள் 50 ஆண்டுகளாக, தடுப்பணையின் மீது மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.சேலம் மாவட்டம், ஏற்காடு சேர்வராயன் மலையில் உற்பத்தியாகி வரும் சரபங்கா ஆறு, ஓமலுார், சின்னப்பம்பட்டி, இடைப்பாடி உள்ளிட்ட பகுதியை கடந்து தேவூர் மயிலம்பட்டியில் உள்ள தடுப்பணையில் தேங்கி, அண்ணமார் கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது.இந்த தடுப்பணையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் அடுத்து ஆறு மாதத்திற்கும் மேலாக தண்ணீர் நிரம்பி வழிந்து வருகிறது. தடுப்பணை வழியாக பெரமச்சிபாளையம், சோழக்கவுண்டனுார், சென்றாயனுார், மேட்டாங்காடு, வெள்ளக்கல்தோட்டம், மேட்டுப்பாளையம், ரெட்டிபாளையம் நல்லங்கியூர் உள்ளிட்ட கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தினந்தோறும் தேவூருக்கு சென்று வருகின்றனர். தேவூர் சரபங்கா ஆற்றின் தடுப்பணையில் தண்ணீர் நிரம்பி வழிந்து செல்வதால், தடுப்பணையின் தரைப்பகுதி பாசி படர்ந்து, நடந்து செல்ல முடியாத அளவுக்கு உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பாசி படர்ந்துள்ளதால், தடுப்பணை வழியாக நடந்து செல்லும்போது பலர் சறுக்கி விழுந்து படுகாயம் அடைந்துள்ளனர். பாசி படர்ந்துள்ள தடுப்பணையால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், 7 கி.மீ., துாரம் சுற்றி தேவூர் பகுதிக்கு சென்று வருகின்றனர்.சரபங்கா நதி தடுப்பணையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் எனக்கோரி, 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து தேவூரை சேர்ந்த லட்சுமணன் கூறும்போது, ''எங்கள் பகுதியினர், 50 ஆண்டுகால பாலம் கட்ட கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து பலமுறை கலெக்டர், ஆர்.டி.ஓ., தாசில்தார் ஆய்வு செய்தும், கோரிக்கை நிறைவேறவில்லை. தடுப்பணையில் விரைவில் மேம்பாலம் அமைத்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.தேவூர், மேட்டக்காடு பகுதியை சேர்ந்த அய்யாசாமி கூறும்போது, ''இந்த வழியாக நாங்கள் நடந்து செல்ல முடியாமல், 7 கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களின் நிலையை போக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை