| ADDED : பிப் 13, 2024 12:25 PM
கெங்கவல்லி: உலிபுரத்தில், ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்துள்ள இடத்துக்கு, ஹிந்து சமய அறநிலையத்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால், வேறு இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உலிபுரம் கிராமத்தில், நாளை பாம்பாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி, ஜல்லிக்கட்டு விழா நடத்துவதற்கு, விழா குழு சார்பில் மனு அளித்தனர். ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்த இடம், ஹிந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்பதால், அத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வேறு இடம் தேர்வு செய்யும் பணியில் விழா குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, கெங்கவல்லி தாசில்தார் வெங்கடேசன் கூறியதாவது: ஜல்லிக்கட்டு நடத்த தேர்வு செய்த இடத்தை, விளை நிலத்துக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளோம்.இங்கு ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதிக்க இயலாது என, ஹிந்து சமய அறநிலைத்துறையினர் கூறியுள்ளனர். அந்த இடத்துக்கு, போலீசாரும் அனுமதி வழங்கவில்லை. வேறு இடம் தேர்வு செய்து, மற்றொரு தேதியில் நடத்த, விழா குழு மனு அளித்தால் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு கூறினார்.