| ADDED : ஜூலை 14, 2011 09:13 PM
சிவகங்கை : அந்தமானுக்கு ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர் கடத்தியதை தொடர்ந்து, சிவகங்கையில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதம், அந்தமானுக்கு சென்ற கப்பலில், மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அதில், 6,000 கிலோ ஜெலட்டின் குச்சி, டெட்டனேட்டர்கள் சிக்கியது. இதில் 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், சிவகங்கை அருகே கூவாணிபட்டியில் அப்பாஸ் மந்திரியிடம் வாங்கியதாக தெரிவித்தனர். அந்தமான் போலீசார் அப்பாஸ் மந்திரியை கைதுசெய்தனர். சில நாட்களுக்கு பின் குடோன் உரிமையாளர் அபுதாகீரையும் கைது செய்தனர்.
விசாரணை: மாவட்டத்தில், நான்கு இடங்களில் லைசென்ஸ் பெற்ற வெடிமருந்து குடோன் உள்ளது. நாட்டு வெடி தயாரிக்கும் தொழிலுக்காக 10க்கும் மேற்பட்டோர் லைசென்ஸ் பெற்றுள்ளனர். 30க்கும் மேற்பட்ட இடங்களில் லைசென்ஸ் பெற்ற பட்டாசு கடைகள் உள்ளன. இவற்றில், தினமும் போலீசார் சோதித்து வருகின்றனர். சோதனையில், வெடிமருந்து பொருட்கள் விற்ற விபரம், இருப்பு விபரம், யாருக்கு விற்கப்பட்டது போன்ற விபரங்களை சேகரித்து வருகின்றனர். இதுதவிர புதிய 'லைசென்ஸ்' பெறாமலும், லைசென்ஸ்களை புதுப்பிக்காமலும் இருந்தால் அதன் விபரங்களை போலீசார் சேகரிக்கின்றனர்.