சிவகங்கை, : சிவகங்கை தேர்தல் நடத்தை விதிமீறல் தடுத்தல், ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் அளிப்பதை தடுக்க பறக்கும் படை, கண்காணிப்பு, வீடியோ குழுக்களை தீவிரப்படுத்தி கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.சிவகங்கை தொகுதியில் சிவகங்கை, மானாமதுரை (தனி), காரைக்குடி, திருப்புத்துார், புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தேர்தல் நடத்தை விதிமீறல் தடுத்தல், ஓட்டுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர வாகன சோதனையில் பறக்கும் படையினர் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுஉள்ளது. இதற்காக ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் 3 குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தினமும் காலை 6:00 மணிக்கு துவங்கி மதியம் 2:00 மணி, மதியம் 2:00 முதல் இரவு 10:00 மணி, இரவு 10:00 மணி முதல் காலை 6:00 மணி வரை என ஒவ்வொரு எட்டு மணி நேரத்திற்கும் ஒரு நிலையான கண்காணிப்பு குழு, தேர்தல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் என சட்டசபைக்கு தலா 3 குழுக்களை கலெக்டர் நியமித்துள்ளார். இதன் மூலம் வேட்பாளர்கள், கட்சியினர் ஓட்டு சேகரிப்பிற்காக வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் எடுத்து செல்லுதல், தேர்தல் நடத்தையை மீறி ஒவ்வொரு நபரும் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து சென்றால், பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் தாசில்தார், துணை தாசில்தார், பி.டி.ஓ., சிறப்பு எஸ்.ஐ., ஆயுதப்படை போலீஸ், வீடியோ கிராபர் வீதம் இடம் பெற்றிருப்பர். வேட்பு மனு தாக்கல் மார்ச் 27 முடிந்த பின் வேட்பாளர்கள் தொகுதி மக்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஆர்வம் செலுத்துவர். அந்த நேரங்களில் பரிசு பொருள், பணம் எடுத்து செல்வதை தடுப்பதற்கு இக்குழு தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.