| ADDED : மார் 31, 2024 06:53 AM
திருப்புவனம், : திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு சாலையோர மின்கம்பத்தில் தனியார் பஸ் மோதி சிக்கி கொண்டது, பெரிய அளவில் விபரீதம் ஏற்படும் முன் சிலர் பஸ் மீது ஏறி கம்பியை அகற்றியதால் விபத்து தவிர்க்கப்பட்டது.திருப்புவனத்தில் இருந்து நயினார்பேட்டை, அல்லிநகரம், முக்குளம் வழியாக நரிக்குடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்புவனம் மெயின் ரோட்டில் இருந்து மணிமந்திர விநாயகர் கோயில் அருகே குறுகிய வளைவில் பஸ்கள் திரும்புவது வழக்கம், மின்கம்பிகள் இணைப்பிற்கு கோயிலை ஒட்டி இரும்பு மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் பேரூராட்சி சார்பில் இரும்பு மின்கம்பத்தில் தெருவிளக்கும் பொருத்தப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் இரவு ஏழு மணியளவில் தனியார் பேருந்து மதுரை செல்ல திரும்பும் போது தெருவிளக்குடன் மின்கம்பியும் பஸ்சின் கூரை மீது சிக்கி கொண்டது. ஆபத்தை உணர்ந்து பயணிகள் பலரும் பஸ்சை விட்டு இறங்கி விட்டனர். பஸ் ஊழியர் ஒருவர் பஸ் மீது மரக்கட்டை வைத்து மின் கம்பியையும் தெருவிளக்கு இணைப்பையும் துண்டித்தார், அதன்பின் பஸ்சை சிறிது சிறிதாக நகர்த்தி வெளியே எடுத்து கிளம்பிச் சென்றனர்.