| ADDED : மே 06, 2024 12:28 AM
தேவகோட்டை : தேவகோட்டை அருகே தாணிச்சாவூரணி மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த வடமஞ்சுவிரட்டில், வடக்கயிறு அறுந்து காளை விழா மேடையில் குதித்தது.நேற்று நடந்த வடமஞ்சுவிரட்டில் 13 காளைகள் பங்கேற்றன. காளைகளை அடக்க 117 வீரர்கள் பங்கேற்றனர். கிராம பொட்டலின் நடுவே வடக்கயிற்றை கட்டி, அதில் காளையை கட்டி வைத்துவிடுவர். ஒரு காளையை அடக்க 25 நிமிடம் ஒதுக்கப்படும். அதற்குள் காளையை அடக்கும் வீரர்களுக்கு பரிசும், அடங்காத காளை உரிமையாளருக்கும் பரிசு அளிக்கப்படும். ஒரு காளையை அடக்க ஒரே நேரத்தில் 9 வீரர்கள் களத்தில் இறக்கப்படுவர். மஞ்சுவிரட்டில் 4 வது காளையை கயிற்றில் கட்டி, களத்தில் இறக்கினர். அப்போது வடக்கயிறு அவிழ்ந்ததால், காளை வீரர்களை விரட்டியது. அப்போது தெறித்து ஓடிய காளை விழா மேடையில் ஏறி குதித்தது. இதனால், விழாக்குழுவினர், பார்வையாளர்கள் தெறித்து ஓடினர். இதையடுத்து போலீசார் மஞ்சுவிரட்டை பாதியிலேயே நிறுத்தினர். காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர். அனுமதியின்றி வடமஞ்சுவிரட்டு நடத்தியதாக ஆறாவயல் போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிந்தனர்.