| ADDED : மே 10, 2024 04:50 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் வாழை விளைச்சல் பாதிப்பால் வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலையும் உயர்ந்துள்ளது.திருப்புவனம் வட்டாரத்தில் கலியாந்துார், நயினார்பேட்டை, திருப்புவனம்,மாரநாடு, கானுார், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் வாழை விவசாயம் செய்யப்படுகிறது.இப்பகுதியில் ஒட்டு வாழை, நாட்டு வாழை அதிகளவு பயிரிடப்படுகிறது. ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் வரை செலவு செய்து வாழை பயிரிடுகின்றனர். ஏக்கருக்கு ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்தாலும் 10 மாதங்கள் கழித்து அறுவடை நேரத்தில் 90 சதவிகித மரங்களில் தான் காய்கள், பழங்கள் கிடைக்கும்.தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வாழை விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.கடும் கோடை வெயில் காரணமாக பெரும்பாலான மரங்களில் பூக்கள் உதிர தொடங்கியுள்ளன. காய்கள் பிடித்தாலும் அவை 10 மாத வாழை மரத்திற்கான காய்களாக இல்லாமல் சிறுத்து காணப்படுகிறது. நாட்டு வாழைக்காய்களை பழுக்க வைத்து உள்ளுரில் விற்பனை செய்வார்கள். ஒட்டு வாழை பெரும்பாலும் பஜ்ஜி செய்வதற்காக மட்டுமே பயன்படுத்துகின்றனர். விளைச்சல் குறைவால் வாழைப்பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் விலை உயர்ந்துள்ளது. நாட்டு வாழைப்பழம் நான்கு ரூபாயில் இருந்து ஆறு ரூபாயாகவும் செவ்வாழைப்பழம் பத்து ரூபாயில் இருந்து 12 ரூபாயாகவும் உயர்ந்து விட்டது.வியாபாரிகள் கூறுகையில்: நாட்டு வாழை,ஒட்டு வாழை, பச்சை வாழை மட்டுமே உள்ளுரில் விளைவிக்கப்படுகிறது. மற்ற வாழைகள் அனைத்தும் பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து வாங்கி வருகிறோம். வரத்து குறைவால் விலை மதுரை மார்க்கெட்டிலேயே அதிகரித்துள்ளது. வைகாசி பிறந்தால் இன்னமும் விலை உயரும், என்றனர்.