சிவகங்கை: சிவகங்கை நகரில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது நகராட்சி நிர்வாகத்திற்கு போராட்டமாகவே இருந்து வருகிறது.காவிரி கூட்டு குடிநீர் திட்டம், இடைக்காட்டூர் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் தேவை ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டாலும், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.இப்பிரச்னைக்கு தீர்வு காண முதலில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். நகரில் பல தெருக்கள் சிமென்ட் ரோடாகவும், கான்கிரீட் சாலைகளாகவும் மாற்றப்பட்டதால், மழைநீர் நிலத்திற்குள் செல்ல வழியின்றி சாக்கடைகளில் கலந்து வீணாகி வருகிறது.சிவகங்கையை ஆண்ட மன்னர்கள் நகரைச் சுற்றிலும் 13 குளங்களை வெட்டி, மக்களின் குடிநீர் பயன்பாட்டிற்கு ஏற்பாடு செய்து உள்ளனர். ஆனால், அந்த 13 குளங்களின் இன்றைய நிலை பரிதாபமாக உள்ளது. தெப்பக்குளம்
6 படித்துறைகளுடன் உருவாக்கப்பட்ட தெப்பக்குளத்தில் 2 படித்துறை ஆண்களுக்கும், 4 பெண்களுக்கும் பயன்பாட்டில் இருந்தது. தற்போது இந்த தெப்பகுளம் காட்சி பொருளாக மட்டுமே உள்ளது. தெப்பகுளத்தில் குப்பைகளை வீசுகின்றனர். சிவகங்கை நகரில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் இதில் கலக்கிறது. கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. உடையார் சேர்வை ஊரணி
சிவகங்கை - திருப்புத்துார் ரோட்டில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் அருகில் முட்கள் முளைத்து குப்பை கொட்டப்பட்டு சுற்றுப்பகுதி மண்சரிந்து ஊரணி காணப்படுகிறது .இந்த ஊரணியின் நடுவில் தண்ணீர் தேக்க வசதியாக தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் வருடத்தில் பெரும்பாலான நாட்கள் வறண்டு கிடக்கிறது. ஆத்தா ஊரணி
சிவகங்கை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் உள்ள இந்த ஊரணி வட்ட வடிவில் செம்புரான் கற்களால் படித்துறைகளுடன் கட்டப்பட்டுள்ளது.ஆனால் தண்ணீர் வரத்து கால்வாய் தான் மாயமாகி விட்டது. லட்சுமி தீர்த்தம்
நகரில் ஆவரங்காட்டு தெருவில் உள்ள சிவஞான சுப்பிரமணியர் கோயிலுக்குரிய இந்த குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பாசிக்குட்டையாக மாறி காணாமல் போய் விட்டது. சேவல்கட்டு ஊரணி
நகரின் கிழக்கே உள்ள மாப்பிள்ளைதுரை அரண்மனை எதிரே சேவல் சண்டை நடக்கும் திடலை ஒட்டி இருப்பதால் சேவல்கட்டு ஊரணி அல்லது சாவக்கட்டு ஊரணி என அழைக்கப்பட்டு வருகிறது. பயன்பாடின்றி கிடப்பதே இந்த ஊரணியின் இன்றைய நிலை. மாப்பிள்ளை தேவர் ஊரணி
சிவகங்கை நகரின் நுழைவு வாயிலாக உள்ள ஆர்ச் அருகே 4 படித்துறைகளுடன் உள்ளது.1998 வரை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது தற்போது பராமரிப்பின்றி கிடக்கிறது. வடுகன் குளம்
சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தை ஒட்டியுள்ள இக்குளத்தில் மேற்கு பக்கம் விளையாட்டு மைதான சுவர் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வருவதற்கு வரத்து கால்வாய் முற்றிலும் அழிந்து, மறைந்து விடும் நிலையில் உள்ளது. குண்டூரணி
பழைய அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உள்ள இந்த ஊரணி முற்றிலும் மறைந்து குப்பை மேடாகி இருந்தது. தற்போது துார்வாரப்பட்டு குண்டூரணி மட்டும் உள்ளது. தண்ணீர் இல்லை. அதற்கான வரத்துகால்வாய் முற்றிலும் தடைபட்டு உள்ளது. செக்கடி ஊரணி
தினசரி சந்தைக்கு அருகில்இன்றைக்கும் தண்ணீர் தேங்கி இருக்கும் ஒரே ஊரணி இது தான். சேங்கை ஊரணி
சிவகங்கை -- மானாமதுரை ரோட்டில் உள்ள வாணியங்குடி ஊராட்சியின் கிழக்கே மருதப்ப அய்யனார் கோயில் எதிர்புறம் இருக்கும் ஊரணி. இந்த ஊரணி ஒரு காலத்தில் குடிநீர் எடுக்க பயன்பட்டதாக இந்திரா நகர், கீழவாணியங்குடி மக்கள் இன்றும் கூறுகின்றனர். சோலையா ஊரணி காணாமல் போய்விட்டது. சாத்தப்ப ஞானியார் ஊரணி
சிவகங்கை ராஜா மேல்நிலைப்பள்ளிக்கு தெற்கே மஜீத் ரோட்டில் உள்ள இந்த ஊரணி தற்போது வறண்டு பொட்டல் காடாக உள்ளது. செட்டிஊரணி
இந்த ஊரணி தான் சிவகங்கை நகர மக்களின் பிரதான ஊரணியாக நீண்டகாலமாக திகழ்ந்தது. தற்போது துார்வாரப்பட்டு வேலி போடப்பட்டுள்ளது.சிவகங்கை நகராட்சி இந்த 13 குளங்களை துார்வாரி வரப்போகும் மழை காலத்திற்குள் அவற்றை சீரமைத்தால் சிவகங்கையில் நிலத்தடிநீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவை பூர்த்தியாகும்.