| ADDED : மே 30, 2024 02:14 AM
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சிகளுக்கான நிதிக்குழு மானிய நிதியில் ரூ.1.34 கோடி முறைகேடு செய்யப்பட்டது குறித்து தற்காலிக கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சிங்கம்புணரி ஒன்றியத்தில் கடந்த 2021 - -22ம் ஆண்டு முதல் 2024-25 வரை ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட 14வது மற்றும் 15வது நிதிக்குழு மானிய நிதியில் முறைகேடு நடந்திருப்பது அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை எடுக்க ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்களுக்கு டிஜிட்டல் கையொப்ப அட்டைகள் கொடுக்கப்பட்டன. அதனை பயன்படுத்தியே அவர்கள் ஒப்பந்ததாரர்களின் வங்கி கணக்குகளுக்கு பணத்தை விடுவித்து வருகின்றனர்.அந்த அட்டையை பயன்படுத்த தெரியாத சிங்கம்புணரி ஒன்றியத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் சிலர் ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த தற்காலிக கம்ப்யூட்ட ஆப்பரேட்டரான பிரவீன்ராஜ் 33, என்பவரிடம் கொடுத்து வைத்திருந்தனர்.இவர் அந்த அட்டைகளை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்களுக்கு அனுப்ப வேண்டிய நிதியை வேறு வங்கிக் கணக்குக்கு அனுப்பி முறைகேடு செய்துள்ளார். இதன் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.34 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷிடம் ஒன்றிய அதிகாரிகள் புகார் தெரிவித்தனர். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரவீன்ராஜ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.