உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பசுமை நிலப்பரப்பை 23 சதவீதமாக்க வேண்டும் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு 

பசுமை நிலப்பரப்பை 23 சதவீதமாக்க வேண்டும் கலெக்டர் ஆஷா அஜித் பேச்சு 

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சிகளில் மரக்கன்று வளர்ப்பதன் மூலம் பசுமை நில பரப்பினை 23 சதவீதமாக அதிகரிக்க முடியும் என கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது.இதில் கலெக்டர் பேசியதாவது: ஊராட்சிகளில் நடக்கும் அனைத்து வளர்ச்சிக்கும் தலைவர்களின் பங்களிப்பு அவசியம். ஊராட்சியை பொருளாதார, கல்வி வளர்ச்சி, சுகாதாரம் ரீதியாக பாதுகாக்க வேண்டும். ஊராட்சிக்கான வருமானத்தை வரி மூலம் தான் அதிகரிக்க வேண்டும். வரி வசூலுக்கு முக்கியத்துவம் தந்து ஈடுபட வேண்டும். எளிமையாக வரியை வசூலிக்க ஆன்லைனில் செலுத்துவதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.ஆரம்பத்தில் பர்சில் பணம் இருந்தால் தான் வெளியே செல்வோம். ஆனால், இன்றைக்கு அலைபேசியை தான் எடுத்து செல்கிறோம். அதன் மூலமே கூகுள் பே, ஜி பே மூலம் பணத்தை செலுத்தும் விதத்தில் வளர்ந்துள்ளனர். இதனால் வரிகளை ஆன்லைனில் எளிமையாக வசூலித்து விடலாம்.

ஆன்லைனில் அப்ரூவல் வழங்கல்

கட்டட பிளான் அப்ரூவல் வழங்க, வீடுகளுக்கு 14 ஆயிரம் சதுர அடிக்கு குறைவாகவும், வர்த்தக நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் சதுர அடிக்கு கீழ் அப்ரூவல் ஊராட்சிகளில் வழங்கலாம்.ஆன்லைனிலேயே அப்ரூவல் வழங்க வேண்டும். கால தாமதம் செய்தால் 30 நாட்களுக்கு பின் உரிய கட்டணத்தை செலுத்தியிருந்தால், விதிப்படி கம்ப்யூட்டரில் தானாகவே அப்ரூவல் அளித்து விடும்.இதை ஊராட்சி தலைவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஊராட்சிகளில் அதிகளவில் வேலை உறுதி திட்டம் மூலம் தான் பணிகள் நடக்கிறது. 2023 -- 24 ம் ஆண்டுக்கான பணிகளை விரைந்து முடிக்க தலைவர், ஊராட்சி செயலர்கள் செயல்பட வேண்டும்.

23 சதவீதம் நில பசுமை அவசியம்

வேலை உறுதி திட்டத்தில் அதிகளவில் வேலை தருவதில்லை என தெரிவிக்கின்றனர். இதில் முக்கிய பணியாக மரக்கன்று நடுதல் மேற்கொள்ளப்படுகிறது. இம்மாவட்டத்தில் 7 சதவீதம் தான் பசுமையான பகுதியாக உள்ளது. ஆனால், அரசு விதிப்படி 23 சதவீதம் இருக்க வேண்டும்.ஊராட்சிகள் தோறும் மரக்கன்றுகள் வளர்த்து, மாவட்டத்தில் 23 சதவீத நிலப்பரப்பை பசுமை பகுதியாக மாற்ற உதவ வேண்டும்.இதற்காக ஒவ்வொரு ஊராட்சியும் உறுதி மொழியாக எடுத்து செயல்பட வேண்டும். ஊராட்சிகளில் கல்வித்துறை மூலம் 15 நாட்களுக்கு மேல் பள்ளிக்கு வராத குழந்தைகளை கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறிந்து வருகின்றனர். இதன் மூலம் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளராவதை தடுக்க முடியும். குழந்தை திருமணம், தொழிலாளர் இல்லாத பகுதியாக ஊராட்சிகளை மாற்ற வேண்டும் இவ்வாறு பேசினார்.

கீழடி ஊராட்சிக்கு கேடயம்

கூட்டத்தில் சிறந்த ஊராட்சிக்கான விருது மற்றும் கேடயத்தை கீழடிக்கு கலெக்டர் வழங்கினார். அதை தொடர்ந்து சாத்தனி, வேம்பத்துார், மறவமங்கலம், செவ்வூர், ஆராவயல், தட்டட்டி, உஞ்சனை, இ.மாத்துார், கிழவயல் ஆகிய ஊராட்சிகளுக்கும் பாராட்டு சான்று வழங்கப்பட்டது. ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கேசவதாசன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்