| ADDED : மே 30, 2024 03:23 AM
காரைக்குடி: காரைக்குடியில் கொரோனா காலத்தில் துாய்மை பணி செய்த, துாய்மை பணியாளருக்கு அறிவித்தபடி ஊக்கத்தொகையை வழங்கக்கோரி மனு அனுப்பும் போராட்டத்தில் துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.காரைக்குடி நகராட்சியில் துாய்மை பணியில், 120 நிரந்தர தொழிலாளர்களும் 200 ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2021ல் கொரோனா காலத்தில் துப்புரவு பணி செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படவில்லை எனக் கூறி 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று காரைக்குடி தலைமை போஸ்ட் ஆபீஸில் இருந்து முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பி வைத்தனர்.துாய்மை பணியாளர்கள் கூறுகையில்:கடந்த 2021ல் கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து துப்புரவு பணி மேற்கொண்ட தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இது சம்பந்தமாக துாய்மை பணியாளர் ஒருவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலருக்கு, பணியாளர்கள் தனித்தனியாக மனு கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.அதன் அடிப்படையில் நேற்று மனு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்ட நிலையில் எங்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. விரைவில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.