உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் தொடரும் ரோட்டோர வாரச்சந்தை கவுன்சிலர்கள் எதிர்ப்பு

திருப்புவனத்தில் தொடரும் ரோட்டோர வாரச்சந்தை கவுன்சிலர்கள் எதிர்ப்பு

திருப்புவனம், : திருப்புவனத்தில் ரோட்டை ஆக்கிரமித்து வாரச்சந்தை நாட்களில் கடைகள் அமைக்கப் படுகிறது, இதை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.திருப்புவனத்தில் 2020 வரை ரோட்டை ஆக்கிரமித்து வாரச்சந்தை நடந்து வந்தது. செவ்வாய் கிழமை தோறும் நடக்கும் சந்தையில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகள் ரோட்டிலேயே கடைகள் அமைத்து வியாபாரம் செய்யும் போது மக்களும் ரோட்டில் நிற்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்தும் நேரிட்டு வந்தன.தொடர்ச்சியாக கலெக்டருக்கு புகார் சென்றதையடுத்து சேதுபதி நகர் எதிரே புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு வாரச்சந்தை அங்கு மாற்றப்பட்டது. மேலும் வாரச்சந்தையில் அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டன.பல மாதங்களாக சந்தை அதற்கு உரிய இடத்தில் பாதுகாப்பாக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மீண்டும் வியாபாரிகள் மதுரை - - - ராமேஸ்வரம் ரோட்டை ஆக்கிரமித்து கடைகள் அமைப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்தும் நடக்கிறது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையில் பணம் வசூல் செய்ய வரும் செப்டம்பர் 1ம் தேதி டெண்டர் விட உள்ளது.இதில் கலந்து கொள்பவர்களுக்கான டெண்டர் விதிமுறைகள் குறித்து கவுன்சிலர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் வாரச்சந்தையில் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிப்பதுடன் வாரச்சந்தையில் தொடங்கி சிவகங்கை ரோட்டில் உள்ள போலீஸ் சோதனைச்சாவடி வரை ரோட்டோர கடைகளிலும் வசூல் செய்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.ஏற்கனவே ரோட்டோர வாரச்சந்தையால் விபத்து நேரும் நிலையில் பேரூராட்சி நிர்வாகமே ரோட்டோர கடைகளிலும் பணம் வசூல் செய்யலாம் என குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கவுன்சிலர் அயோத்தி கூறுகையில்: முத்தனேந்தலில் ரோட்டோர சந்தை நடந்த போது திருப்பூர் சென்ற அரசு பஸ் கூட்டத்தில் புகுந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து சந்தைக்கு தனி இடம் ஒதுக்கப்பட்டு நடந்து வருகிறது.இதே போல திருப்புவனத்திலும் ரோட்டோர சந்தையால் விபத்து நடந்ததையடுத்து அப்போதைய கலெக்டர் ஜெயகாந்தன் புதிய இடம் தேர்வு செய்து சந்தை அங்கு சிரமமின்றி நடந்து வந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள கடைகளுக்கும் கட்டணம் வசூல் செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோட்டை ஆக்கிரமித்து இருப்பவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அதிகாரிகள் எப்படி அப்புறப்படுத்துவார்கள், இதனால் அனைத்து வியாபாரிகளுமே ரோட்டில் கடைகள் அமைக்க வாய்ப்புண்டு, எனவே ரோட்டோர கடைகளை அனுமதிக்க கூடாது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை