உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு ஊழியர்களுக்கு வருமான வரிவிலக்களிக்காதது ஏமாற்றமளிக்கிறது * வருவாய்துறை அலுவலர் சங்கம் கமென்ட்

அரசு ஊழியர்களுக்கு வருமான வரிவிலக்களிக்காதது ஏமாற்றமளிக்கிறது * வருவாய்துறை அலுவலர் சங்கம் கமென்ட்

சிவகங்கை:''மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு அளிக்காதது மாநில அளவில் உள்ள 1.80 கோடி அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் ஏ.தமிழரசன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மத்திய பட்ஜெட் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மகிழ்ச்சியை தருகிறது. முத்ரா கடன் ரூ.20 லட்சம் மற்றும் உயர்கல்வி கடன் ரூ.10 லட்சம் உயர்வு, இளைஞர்களுக்கான ஊக்கத்தொகை சிறந்த அம்சமாகும். வருமான வரி உச்சவரம்பு ரூ.2.5 லட்சம் முதல் 3 லட்சமாகவும், நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இருப்பினும் இது 'யானை பசிக்கு சோளப்பொறி' போன்ற அறிவிப்பு தான். வரிவிலக்கு உச்சவரம்பை குறைந்தது ரூ.5 லட்சம் என மாற்றியிருக்க வேண்டும்.அரசு ஊழியர்கள் தொழில் செய்து லாபம் ஈட்டுபவர் அல்ல. அரசிடம் சம்பளம் பெறுபவர்கள் தான். தற்போதைய வரி விதிப்பின்படி அரசு ஊழியர்கள் குறிப்பாக ஏ மற்றும் பி- பிரிவு அலுவலர்கள் ஒரு ஆண்டில் தங்களது 2 மாத சம்பளத்தை வருமான வரியாக கட்டுகின்றனர். இது அவர்கள் இரண்டு மாதம் சம்பளமின்றி அரசுக்கு வேலை செய்வதற்கு ஒப்பாகும். அரசு ஊழியர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும்.கார்ப்பரேட் வரியை 40ல் இருந்து 35 சதவீதமாக குறைத்த அரசு, மத்திய, மாநில அரசு ஊழியர்கள், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகையில் பாராமுகம் காட்டியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது 1.80 கோடி மாநில அரசு, 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது.தமிழக இயற்கை பேரிடருக்கு நிதி ஒதுக்காமல், ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடி, பீகாருக்கு ரூ.24,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கியது ஒருதலைபட்சத்தை காட்டுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை