| ADDED : ஜூன் 01, 2024 04:44 AM
சிவகங்கை: திருப்புத்துார் முதல் பட்டமங்கலம் விலக்கு வரையிலான காவிரி கூட்டு குடிநீர் குழாய்களை சரி செய்வதற்காக கீழக்கோட்டை அருகே 'வால்வில்' திறக்கப்பட்ட தண்ணீர் பீறிட்டு வெளியேறியது.திருச்சி, முத்தரசநல்லுாரில் காவிரி ஆற்றில் போடப்பட்ட ஆழ்குழாய் கிணற்றில் இருந்து குழாய் மூலம் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுகிறது. இக்குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்ட குழாய்களின் இணைப்பு பகுதிகளில் அதிகளவில் நீர் கசிவு ஏற்பட்டதால், சரியான நேரத்திற்கு சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட குடிநீர் தேவைக்கு தண்ணீர் சப்ளை செய்ய முடியாமல் குடிநீர் வடிகால் வாரியம் திணறி வந்தது. இதையடுத்து, நேற்றும், இன்றும் காவிரி குடிநீர் திட்ட குழாய்களில் ஏற்பட்டுள்ள கசிவை சரி செய்யும் பணி நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். பீறிட்டு எழுந்த காவிரி குடிநீர்
நேற்று காலை திருப்புத்துார் முதல் பட்டமங்கலம் விலக்கு வரையிலான குழாய் கசிவுகளை சீரமைக்கும் பணி நடந்தது. ஏற்கனவே குழாய்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றினால் மட்டுமே, குழாய்களுக்குள் இறங்கி கசிவுகளை அடைக்க முடியும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக கொட்டகுடி ஊராட்சிக்குட்பட்ட கீழக்கோட்டை தரைப்பாலத்திற்கு அருகே செல்லும் குடிநீர் 'ஏர்வால்வு' வழியாக தண்ணீரை திறந்து விட்டனர். இதனால், நேற்று முழுவதும் குடிநீர் வெளியேறியதை அப்பகுதி மக்கள் ஏக்கத்துடன் பார்த்தனர்.