பார்த்திபனுார் மதகு அணைக்குள் செடிகள்கண்மாய்க்கு மழை நீர் செல்வதில் சிக்கல் இரு மாவட்ட விவசாயிகள் புகார்
சிவகங்கை: ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் பார்த்திபனுார் மதகு அணையில் தண்ணீர் வெளியேற முடியாத அளவிற்கு புதர் மண்டிக்கிடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே வேதியரேந்தலில் 534 மீட்டர் நீளத்தில் பார்த்திபனுார் மதகு அணை கட்டி, 1975 ம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியால் திறக்கப்பட்டது.அணையின் கீழ் 25 மதகணை அமைத்து, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கட்டியுள்ளனர். பெரியாறு, வைகை அணைகளில் இருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் நீரை பார்த்திபனுார் மதகு அணையில் தேக்கி வைத்து, வலது, இடது பிரதான கால்வாய் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.241 கண்மாய் மூலம் 67,652 ஏக்கர் பாசனம்:வலது பிரதான கால்வாயில் திறக்கும் நீர் ராமநாதபுரம் மாவட்டத்தில் 154 கண்மாய்களுக்கு சென்று, 32 ஆயிரத்து 267 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இடது பிரதான கால்வாய் மூலம் சிவகங்கையில் 39, ராமநாதபுரத்தில் 48 என 87 கண்மாய்கள் மூலம் இரு மாவட்டத்திலும் 35 ஆயிரத்து 385 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் பார்த்திபனுார் மதகு அணை கட்டியுள்ளனர். இச்சிறப்பு பெற்ற பார்த்திபனுார் மதகு அணையின் உட் பகுதியில் வெள்ள நீர் இரு மாவட்டங்களுக்கு செல்ல முடியாத வகையில், நாணல் செடிகள் வளர்ந்து கிடக்கின்றன. இதனால், வெள்ள நீர் முறையாக கண்மாய்களுக்கு செல்ல முடியாமல் தேங்குகிறது. எனவே அரசு, பார்த்திபனுார் மதகு அணையின் உட்பகுதியில் வளர்ந்துள்ள முட்புதர், நாணல், புற்களை அகற்றி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கால்வாயை துார்வார வேண்டும் என இரு மாவட்ட விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் எல்.ஆதிமூலம் கூறியதாவது:அணையில் இருந்து கண்மாய்க்கு நீர் எடுத்து செல்லும் பாதை அகலமாக இருக்கிறது. இருப்பினும் அணையின் உட்பகுதியில் தண்ணீர் செல்ல முடியாத அளவிற்கு வளர்ந்துள்ள புதர்களை, கோடை காலத்தில் அரசு அகற்ற திட்டமிட வேண்டும்.அப்போது தான் பருவ மழை காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் நீரை, இரு மாவட்ட கண்மாய்களில் சேகரித்து, இரு போக சாகுபடியை எடுக்கலாம். இதற்கு அரசு நல்ல திட்டத்தை வழி வகுக்க வேண்டும், என்றார்.