| ADDED : மே 10, 2024 11:17 PM
கீழடி : கீழடி மியூசியத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் நீரூற்று அமைக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் கடந்தாண்டு மார்ச் 5ம் தேதி முதல் அருங்காட்சியகம் திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஆறு கட்டட தொகுதிகளிலும் கலர் எல்.இ.டி., டி.வி.,க்களும் வைக்கப்பட்டு அந்தந்த கட்டட தொகுதிகளில் உள்ள பொருட்கள் குறித்த விளக்கம் ஒலி, ஒளி காட்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அருங்காட்சியகத்தில் மினி ஏ.சி., தியேட்டரும் அமைக்கப்பட்டு அகழாய்வு குறித்த குறும்படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கீழடியிலும் அதனை விட்டு வைக்கவில்லை. அருங்காட்சியகம் அமைக்க மரங்கள் ஏராளமானவை வெட்டப்பட்டதால் பகல் நேரத்தில் அனல்காற்று வீசுகிறது. சுற்றுலா பயணிகள் கட்டட தொகுதிக்கு செல்ல முடியவில்லை. தெப்பகுளத்தில் தண்ணீர் ஒரு அடி ஆழத்திற்கு மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது. இதில் செயற்கை நீரூற்று அமைத்தால் பகல் நேரங்களில் ஈரக்காற்று வீசி வெப்பத்தின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது. மேலும் நீரூற்றுகளின் கீழே வண்ண வண்ண விளக்குகள் அமைக்கும் போது சிறுவர், சிறுமியர்களை எளிதில் கவரும், எனவே தொல்லியல் துறை கீழடி மியூசியத்தில் செயற்கை நீரூற்று அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.