| ADDED : ஜூன் 18, 2024 07:09 AM
திருப்புவனம் ; மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனை கிராம மக்கள் ஆடு, மாடுகளுக்கான மேய்ச்சல் நிலமாக பயன்படுத்துவதால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப் போக்குவரத்து நடந்து வருகிறது.45 மீட்டர் அகலமுள்ள நான்கு வழிச்சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டு அதில் அரளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. அரளிச்செடிகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் நான்கு வழிச்சாலை நிர்வாகம் மூலம் தண்ணீர் ஊற்றப்படுகிறது.சென்டர் மீடியன்கள் ஒருசில இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் ஐந்து முதல் 10 அடி அகலம் வரை உள்ளது.அரளிச் செடிகளுக்கு ஊற்றும் தண்ணீரால் செடிகளைச் சுற்றிலும் புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளது.நான்கு வழிச்சாலையை ஒட்டியுள்ள தட்டான்குளம், மணலூர், கீழடி, கழுகேர்கடை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் சென்டர் மீடியனை மேய்ச்சல் நிலமாக பயன்படுத்துகின்றனர். ஆடு, மாடுகளை சென்டர் மீடியனில் மேய விட்டு விட்டு சென்று விடுகின்றனர்.மாடுகள் புற்களுக்காக திடீரென சென்டர் மீடியனை விட்டு ரோட்டிற்கு வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துகள் அதிகளவில் நடந்து வருகின்றன.நான்கு வழிச்சாலையில் தினசரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. திருப்புவனத்தைச் சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மதுரை நகரில் கூலி வேலை, கட்டட வேலை, உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு டூவீலர்களில்தான் சென்று வருகின்றனர்.திடீரென சாலையை கடக்கும் மாடுகள் மீது மோதி அப்பாவி வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் மாடுகளால் தொடர் விபத்துகள் ஏற்படுவதாக தினமலரில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து அதிகாரிகள் கடும் நடவடிக்கைக எடுத்தனர். தற்போது அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதால் மீண்டும் மேய்ச்சல் நிலமாக மாற்றி வருகின்றனர். பெரிய அளவில் விபத்துகள் ஏற்படும் முன் சென்டர் மீடியனில் கால்நடைகளை மேய விடுவதை தடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.