| ADDED : மே 03, 2024 05:36 AM
திருப்புவனம்: திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர், கார்களால் நிரம்பி காயலான் கடை போல் காட்சியளிக்கிறது.வைகை ஆற்றங்கரையோரம் உள்ளது திருப்புவனம் காவல் நிலையம். வைகை ஆற்றில் மணல் திருட்டு, சவடு மண் திருட்டு என கனிம வள திருட்டுக்கும் குறைவில்லாத பகுதி, போலீசாரால் மணல் திருட்டில் ஈடுபடும் டூவீலர், கார், லாரி, வேன், மாட்டு வண்டி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்படும். மேலும் நான்கு வழிச்சாலையில் நிகழும் விபத்துகளில் சிக்கும் வாகனங்களும் திருப்புவனம் காவல் நிலையத்திற்கு தான் கொண்டு வரப்படும், இப்படி கொண்டு வரப்பட்ட கார், வேன், பைக், மாட்டு வண்டி, லாரி உள்ளிட்டவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் வளாகம், முன்புறம், பின்புறம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களால் போலீஸ் ஸ்டேஷனே நிரம்பி வழியும் நிலையில் 30க்கும் மேற்பட்ட போலீசாரின் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த இடம் இல்லை. இதனையடுத்து அருகில் உள்ள போலீசார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவுள்ள கவாத்து மைதானத்தை சுத்தம் செய்து வாகனங்கள் அனைத்தையும் அங்கு இடமாற்றினர். கவாத்து மைதானத்தைச் சுற்றிலும் குடியிருப்பு உள்ள நிலையில் குவித்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் விஷ ஜந்துகள் வசிக்கும் இடமாக மாறி குடியிருப்புவாசிகளை அச்சுறுத்தி வருகின்றன.போலீசார் கூறுகையில்: பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை பாதுகாக்க முடியவில்லை. மழையிலும், வெயிலிலும் வாகனங்கள் சேதமடைந்து வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கிடப்பதால் பழைய இரும்பு கடை போல போலீஸ் ஸ்டேஷன் காட்சியளிக்கின்றது என புலம்புகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் வாகனங்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.