சிவகங்கை: சிவகங்கை நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., காங்., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்கவே அச்சமாக இருப்பதாக தி.மு.க., கவுன்சிலர் தெரிவித்தார்.சிவகங்கை நகராட்சியில் மாதாந்திர கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கதவுகள் மூடப்பட்டு கூட்டம் நடந்தது. கூட்டம் துவங்கியதும்11 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி துணைத்தலைவர் கார்கண்ணன் உட்பட தி.மு.க., கவுன்சிலர்கள் 7வது வார்டு காந்தி, 14வது வார்டு அழகுமுத்து பிச்சை, 22வது வார்டு சி.எல்.சரவணன், 5 வார்டு காங்., விஜயகுமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து காதில் பூ வைத்து தி.மு.க.,வைச் சேர்ந்த நகராட்சி தலைவர் துரை ஆனந்த்திற்கு எதிராக எதிராக கோஷங்கள் எழுப்பினர்.துணைத் தலைவர் கார்கண்ணன் கூறுகையில், 27 வார்டுகளிலும் எந்த திட்டமும் செய்யாமல் பூங்காவை பராமரிக்கிறோம் என்ற பெயரில் மிகப்பெரிய கொள்ளை நடந்துள்ளது. பிள்ளைவயல் காளி கோயில் வளாகத்தை சுத்தம் செய்ததிலும் ஊழல் நடந்துள்ளது. இவற்றிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 11 தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வெளிநடப்பு செய்தோம் என்றார்.தி.மு.க., 7வது வார்டு கவுன்சிலர் காந்தி கூறுகையில், எங்கள் வார்டில் சாக்கடை கால்வாய் துார்வார வில்லை. குப்பை அள்ளப்படவில்லை. வார்டுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்வதில்லை என்றார்.5வது வார்டு காங்., விஜயகுமார் கூறுகையில், எனது வார்டில் உடையார்சேர்வை ஊருணியில் தொட்டி பழுதடைந்து ஒரு வருடமாகிறது. இது வரை சரி செய்யவில்லை. அதேபோல் எங்கள் எம்.பி.,யையும், என்னையும் கவுன்சில் கூட்டத்தில் சேர்மன் மரியாதை குறைவான வார்த்தையால் பேசினார்.22வது வார்டு கவுன்சிலர் சி.எல்.சரவணன் கூறுகையில், கூட்டத்திற்கு வரவே பயமாக உள்ளது. கூட்டம் துவங்கும் முன்பாகவே சிலர் வெளியூர் ஆட்களை அழைத்து நிற்க வைத்துஉள்ளனர். அவர்களில் சிலரை போலீசார் பிடித்துச் சென்றுள்ளனர். வார்டில் எந்த வேலையும் நடக்கவில்லை. கேட்டால் ஆள் வைத்து மிரட்டுகிறார்கள்.14வது வார்டு அழகுமுத்து பிச்சை கூறுகையில், எனது வார்டில் பாதாள சாக்கடை ரோட்டில் ஓடுகிறது. இது குறித்து பலமுறை நகராட்சியில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றார். கூட்டத்தில் அ.தி.மு.க., 5, அ.ம.மு.க., 2 கவுன்சிலர்கள் பங்கேற்க வில்லை.நகராட்சி கூட்டம் துவங்குவதற்கு முன்பே இன்ஸ்பெக்டர் லிங்கப்பாண்டி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. நகராட்சிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த சில வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். மேலும் சந்தேகப்படும் படியாக இருந்த இருவரை விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.