| ADDED : மே 28, 2024 05:25 AM
மானாமதுரை நகரில் 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இந்நகர் பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.நாளுக்கு நாள் இந்நகர்வளர்ச்சி அடைந்து வருகிறது. நகரை ஒட்டியுள்ள கிராமங்களை நகராட்சியுடன் இணைக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இந்நகரின் முக்கிய நீராதாரமாக வைகை ஆறு ஓடுகிறது. கடந்த 10 ஆண்டிற்கு முன் ஆதனுார் அருகே தடுப்பணை கட்டப்பட்டது. அப்போது வைகை ஆற்றின் இரு கரையிலும் ரோடு போட்டு, நகரில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தப்படும் என தெரிவித்தனர். அதன்படி வைகை ஆற்றின் இரு கரையில் தார் ரோடு போடுவதற்கு திட்டம் தயாரித்ததோடு, அத்திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர். ரோடு போடுவதற்காக ஆற்றின் இரு கரையிலும் போட்ட மேடான பகுதியை ஆக்கிரமித்து வருகின்றனர். நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து மானாமதுரையில் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதை தவிர்க்க, ஆற்றின் இரு கரையிலும் ரோடு வசதி செய்துதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் இரு கரையில் ரோடு அவசியம்
இதுகுறித்து மானாமதுரை மக்கள் கூறியதாவது: ரோடு போடுவதற்காக வைகை ஆற்றின் இரு கரையில் மண் கொட்டிய இடத்தை தற்போது ஆக்கிரமித்து வருகின்றனர். வீடு, வர்த்தக நிறுவனங்களில் சேகரமாகும் கழிவுகளையும் கொட்டி வருவதால வைகை ஆறு மாசுபடுகிறது. பொதுப்பணி, நெடுஞ்சாலை, வருவாய் துறைகள் இணைந்து ஆற்றின் இரு கரையிலும் ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.