| ADDED : ஆக 12, 2024 03:35 AM
மானாமதுரை, : மானாமதுரை சுற்று வட்டார பகுதிகளில் நான்கு நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் நீர்நிலைகள் நிரம்பி வருவதினால் விவசாயிகள் மகிழ்ச்சிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரை பகுதியில் கடந்த வாரம் வரை கடுமையான வெயில் அடித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவாக மானாமதுரையில் மழையளவு பதிவாகி வருகிறது.நேற்று முன்தினம் இரவு மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கன மழை பெய்ததை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.தெருக்களிலும்,ரோடுகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மானாமதுரையில் உள்ள மண்பாண்ட தொழிற்கூடங்களை மழை நீர் சூழ்ந்து கொண்டதால் தொழிலாளர்கள் மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்கள்,குளங்கள்,ஏரிகள் ஆகியவற்றில் நீர் நிரம்பி வருவதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்னர்.நேற்று காலை 6:00 மணி வரை சிவகங்கை மாவட்டத்தில் அதிகளவாக திருப்புவனத்தில் 90.40 மி.மீ, மானாமதுரையில் 57, சிவகங்கையில் 32.00, திருப்புத்தூரில் 29.40, தேவகோட்டையில் 2.40, சிங்கம்புணரியில் 13.60 மழை பெய்துள்ளது.
திருப்புவனத்தில் 90 மி. மீ., பதிவு
சிவகங்கை மாவட்டத்திலேயே திருப்புவனத்தில் அதிகபட்ச மழை அளவு 90.40 மி.மி.,பதிவாகி உள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் மழை பெய்து வருகிறது. திருப்புவனத்தில் பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் மட்டும் மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது. திருப்புவனத்தில் நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு தொடங்கிய மழை இரவு ஒன்பது மணி வரை பெய்தது . மழை காரணமாக மாலை ஐந்து மணிக்கு துண்டிக்கப்பட்ட மின்சாரம் நள்ளிரவு 12:00 மணிக்கு தான் திரும்ப வழங்கப்பட்டது. திருப்புவனத்தில் கடந்த ஒரு வார காலமாக மாலை நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு வெகு நேரம் கழித்து வழங்கப்படுவதால் ஹோட்டல்கள், டீ கடைகளில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் கூறுகையில் : ஹோட்டல்களில் மாலை ஆறு மணிக்கு தொடங்கி இரவு 10:00 மணி வரை வியாபாரம் நடைபெறும். ஆனால் ஐந்து மணிக்கே மின்சாரம் துண்டிக்கப்பட்டு 11:00 மணிக்கு மேல் தான் திரும்ப வழங்கப்படுகிறது. இதனால் சட்னி, குருமா உள்ளிட்டவைகள் தயாரிக்க முடியவில்லை. எனவே மின்வாரியம் மழை காலங்களில் முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.